திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒரு மாதமாக ஆதார் மையம் செயல்படாததால் பொதுமக்கள் அவதி; நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை


திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒரு மாதமாக ஆதார் மையம் செயல்படாததால் பொதுமக்கள் அவதி; நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 8 July 2019 10:30 PM GMT (Updated: 8 July 2019 7:20 PM GMT)

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் கடந்த ஒரு மாதமாக ஆதார் மையம் செயல்படாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தொண்டி,

திருவாடனை தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் மையத்தில் பொதுமக்களுக்கான ஆதார் அட்டை புதிதாக எடுப்பதற்கு புகைப்படம், கைரேகை, விழித்திரை பதிவு செய்தல் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வது தருவதற்கும் உதவியாக இருந்து வருகிறது. ஆனால் இந்த மையம் கடந்த ஒரு மாதமாக செயல்படவில்லை. இதனால் 300-க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சேவைகளை பெறமுடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து விசாரித்தபோது இம்மையத்தில் எடுக்கப்படும் ஆதார் பற்றிய விவரங்களை ஒருங்கிணைக்க கூடிய மும்பையில் உள்ள நிறுவனம் இங்கு ஆதார் எடுக்கும் நபர்கள் தங்களின் அடையாளத்திற்கு வழங்கும் ஆவணங்கள் அனைத்தும் தமிழில் இருப்பதால் பணியாளருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை ரத்து செய்து விட்டனராம். மேலும் இனிமேல் இங்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்க அனைத்து ஆவணங்களும் ஆங்கிலத்தில் இருந்தால் மட்டுமே ஆதார் புகைப்படம் எடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் அலுவலர்களிடம் கேட்டால் இது தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவது என்றும், இதுதொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாதும் என்றும் கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுப்பதற்கும், அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கும் கடந்த ஒரு மாதமாக அலைந்து திரிகின்றனர். மேலும் இங்குள்ள அலுவலகத்தில் புகைப்படம் எடுக்க வாய்ப்பு இல்லை என்பதால் தினந்தோறும் இங்கு வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாக இருப்பதால் இங்கிருந்து ராமநாதபுரத்திற்கு சென்று அங்குள்ள ஆதார் மையத்தில் புகைப்படம் எடுக்க வேண்டியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக இந்த ஆதார் மையம் செயல்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story