ராதாபுரத்தில் பரபரப்பு: மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
ராதாபுரத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராதாபுரம்,
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்துவிட்டு கடந்த 5-ந் தேதி அதிகாலையில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சில மீனவர்களின் வலைகள் கடலில் தவறி விழுந்துள்ளது. இதனை தேடி 3 நாட்டுப்படகுகளில் கூத்தங்குழியை சேர்ந்த மீனவர்கள் டிலைட் (வயது 50), வினோ (35), சகாயம் (47), அஜித், டைசன் (25), சுரேஷ் ஆகியோர் கடலுக்கு சென்றனர். சுமார் 6 நாட்டிக்கல் தூரத்தில் மீனவர்கள் வலையை தேடிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த குமரி மாவட்டம் சின்னமுட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்களுக்கும், கூத்தங்குழி பகுதி மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதால் விசைப்படகை இயக்கி வந்த சின்னமுட்டம் பகுதி மீனவர்கள், டிலைட் இயக்கிக் கொண்டிருந்த நாட்டுப்படகு மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி டிலைட் கடலுக்குள் விழுந்தார். மாயமான அவருடைய கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. அவரை கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அன்று நடந்த கோஷ்டி மோதலில் கூத்தங்குழியை சேர்ந்த மீனவர்கள் வினோ உள்ளிட்ட 5 பேரும் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்டம் இடிந்தகரை, உவரி, கூத்தங்குழி, பெருமணல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 4 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் ராதாபுரத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேற்று மதியம் மீனவ கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலில் மாயமான மீனவர் டிலைட்டை தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும். அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்.
இச்சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட விசைப்படகுகளை அரசு பறிமுதல் செய்து ஆயுட்கால தடைவிதிக்க வேண்டும். 1983-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாயமான மீனவர் டிலைட்டை ஹெலிகாப்டர் கொண்டு தேட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கடலோர காவல்படை துணை சூப்பிரண்டு ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, இணை இயக்குனர் சாரதா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
மாலையில் வெகு நேரம் வரை பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால், மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட போவதாக மீனவ கிராம மக்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரியை சேர்ந்த வினிஸ், மிக்கேல், ரவன், கோவளத்தை சேர்ந்த சகாயம், ஸ்டீபன் ஆகிய 5 மீனவர்களை கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
மாயமான மீனவர் டிலைட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் தேடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராதாபுரம் தாசில்தார் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story