கழிவறை சுவர் இடிந்து 2 மாணவிகள் காயம் பள்ளி முன்பு உறவினர்கள் தர்ணா தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்


கழிவறை சுவர் இடிந்து 2 மாணவிகள் காயம் பள்ளி முன்பு உறவினர்கள் தர்ணா தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 9 July 2019 4:30 AM IST (Updated: 9 July 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே, கழிவறை சுவர் இடிந்து விழுந்து 2 மாணவிகள் காயம் அடைந்த பள்ளி முன்பு மாணவியின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

எருமப்பட்டி, 

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக மணிமேகலை என்பவர் இருந்தார்.

கடந்த 4-ந் தேதி இந்த பள்ளி மாணவிகள் 5-ம் வகுப்பு படிக்கும் காயத்ரி (வயது 9) மற்றும் கனிஷ்கா (9) ஆகியோர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்றபோது கழிவறையின் சுவர் இடிந்து விழுந்ததில் இருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து இவர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்கைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிசிச்சை பெற்று வரும் மாணவி காயத்ரிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், மாணவிக்கு உடல் ரீதியாக என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என டாக்டர்கள் கூற மறுப்பதாகவும், மேலும் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழும் வரை அலட்சியமாக இருந்த பள்ளியின் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி மாணவியின் உறவினர்கள் தொடக்கப்பள்ளி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எருமப்பட்டி போலீசார் மற்றும் வட்டார கல்வி அலுவலர் சந்திரவதனா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சுமார் 2 மணி நேரம் நீடித்த போராட்டத்தை மாணவியின் உறவினர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதற்கிடையே பணியில் கவன குறைவாக செயல்பட்டதாக கூறி பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) உதயகுமார் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story