13 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வருகை: நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து கலெக்டருடன் ஆலோசனை


13 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வருகை: நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து கலெக்டருடன் ஆலோசனை
x
தினத்தந்தி 8 July 2019 11:00 PM GMT (Updated: 8 July 2019 7:44 PM GMT)

நீர் மேலாண்மை திட்டங்களை ஆய்வு செய்ய நாமக்கல்லுக்கு 13 பேர் கொண்ட குழுவினர் நேற்று வருகை தந்தனர். இவர்கள் தற்போது மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் நீர்சேகரிப்பு திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆசியா மரியத்துடன் ஆலோசனை நடத்தினர்.

நாமக்கல்,

மத்திய அரசின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள நீர் மேலாண்மைத்துறை (ஜல்சக்தி அபியான்) மூலமாக நீர் மேலாண்மை திட்டங்களை உருவாக்குவதற்காக நாமக்கல் மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிற நீர் மேலாண்மை திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக உயர் அலுவலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட 13 பேர் அடங்கிய குழுவினர் நாமக்கல் வருகை தந்துள்ளனர்.

இக்குழுவில் மத்திய அரசின் ஆயுஷ் துறையின் இணை செயலாளர் ரஞ்சித்குமார் தலைமையில் உயர் அலுவலர்களும், வல்லுநர் குழுவினரும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், வனத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் நீர் நிலைகளை மேம்படுத்தி உள்ள பணிகள், மழைநீர் சேகரிப்பு, பண்ணைக்குட்டைகள் உள்ளிட்ட நீர் பயன்பாடு, நீர் மேலாண்மை, நீர் செறிவூட்டும் கட்டமைப்பு பணிகள் குறித்து 3 நாட்கள் நேரில் சென்று பார்வையிட உள்ளனர்.

முன்னதாக கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஜல்சக்தி அபியான் இயக்க குழுவின் தலைவர் ரஞ்சித்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினருக்கு நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ள நீர் சேகரிப்பு திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆசியா மரியம் விளக்கினார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வீடுகளில் நீர் உறிஞ்சு குழிகள் அமைத்தல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும், வனத்துறையின் மூலம் மலை பகுதிகளில் காட்டாறுகளில் நீரினை சிறு தடுப்பணைகள் கட்டி செறிவூட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் மழைநீரை வீணாக்காமல் சேமிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் வீடுகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. குடிமராமத்து திட்டத்தின் கீழ், பாசன குளங்கள் அப்பகுதி விவசாய சங்கங்களின் மூலம் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளும், மதகுகள் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள நீர் ஆதாரம், பாதுகாப்பு மற்றும் நீர் சேகரிப்பு திட்டங்கள் குறித்த படக்காட்சிகள் மத்திய குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story