மேட்டூர் அணை தண்ணீரை ஏரிகளில் நிரப்பக்கோரி அரைநிர்வாணத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள்


மேட்டூர் அணை தண்ணீரை ஏரிகளில் நிரப்பக்கோரி அரைநிர்வாணத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள்
x
தினத்தந்தி 9 July 2019 4:00 AM IST (Updated: 9 July 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை தண்ணீரை ஏரிகளில் நிரப்பக்கோரி அரைநிர்வாணத்துடன் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.

சேலம், 

வெள்ளாளகுண்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார். விவசாயி. இவர் நேற்று கோவணத்துடன், சில விவசாயிகள் அரைநிர்வாணத்துடன் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். விவசாயிகளிடம் வேட்டி, சட்டை அணிந்து கொண்டு வாருங்கள், பிறகு மனு அளிக்க செல்ல அனுமதிக்கிறோம் என கூறி தடுத்தனர். இதனால் விவசாயிகள் போலீசாருடன் தகராறு செய்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீரை பஞ்சப்பள்ளி கிராம ஆறுவரை குழாய்கள் அமைக்க வேண்டும். பின்னர் மோட்டார் மூலம் இயக்கி, அந்த நீரை பூலாவரி, மல்லூர், பனமரத்துப்பட்டி, அல்லிக்குட்டை, நாட்டாமங்கலம், மேட்டுப்பட்டி, சேஷன்சாவடி, வாழப்பாடி, சிங்கிபுரம், அறுநூற்றுமலை, கருமந்துறை ஆகிய ஏரிகளில் நிரப்பி தண்ணீரை சேமிக்க வேண்டும். வெள்ளாள குண்டம் ஏரி வழியாக இந்த நீரை சென்னை வரை சென்றடையும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரவேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பி எப்போதும், தண்ணீர் கஷ்டம் ஏற்படாது. இதை அரசு பரிசீலனை செய்ய வலியுறுத்தி அரை நிர்வாணமாக வந்தோம் என்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், 5 ரோடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலம் காரணமாக 5 ரோட்டில் இருந்து ஜங்சன் வரை செல்லும் சாலையை முழுமையாக மறிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பாலத்தின் வடக்கு பகுதி முழுமையாக அடைக்கப்பட்டுவிட்டது. தெற்கு பகுதியில் குண்டும், குழியுமான குறுகலான பாதையால் இருசக்கர வாகனங்கள் மட்டும் தட்டுத்தடுமாறி செல்லும் வகையில் உள்ளது.

பாலத்தின் இருபுறம் போக்குவரத்துக்கான சாலை வசதி ஏற்பாடு செய்யாமல் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆதலால் 5 ரோட்டில் இருந்து ஏ.வி.ஆர். ரவுண்டானா வரை செல்வதற்கு 2 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. பஸ்கள் தாமதமாக செல்வதோடு, பிற வாகன ஓட்டிகளுக்கும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே 5 ரோடு முதல் ஜங்சன் செல்லும் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் இருபுறமும் பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சென்று வர சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Next Story