வடபழனி போலீஸ் குடியிருப்பில் கழுத்தை அறுத்து சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை


வடபழனி போலீஸ் குடியிருப்பில் கழுத்தை அறுத்து சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
x
தினத்தந்தி 9 July 2019 3:15 AM IST (Updated: 9 July 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

வடபழனி போலீஸ் குடியிருப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி,

சென்னை வடபழனியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சேகர் (வயது 48). இவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர், தனியார் பள்ளியில் வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை பணி முடிந்து தமிழ்ச்செல்வி வீட்டுக்கு வந்தார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டியும் சேகர் கதவை திறக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் படுக்கை அறையில், சேகர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு அருகில் கத்தி கிடந்தது. சேகர், கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், தற்கொலை செய்த சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தற்கொலை செய்த சேகர், சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சிக்காக வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்துக்கு சென்று வந்தார். சில தினங்கள் மட்டுமே சென்ற அவர், அதன்பிறகு குடும்ப பிரச்சினை காரணமாக பயிற்சிக்கு செல்லாமல் சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு மதுபோதையில் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

நேற்று குடிபோதையில் இருந்த அவர், மன உளைச்சல் காரணமாக கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story