அரியாங்குப்பத்தில் தீ விபத்து; 5 குடிசை வீடுகள் எரிந்து நாசம்


அரியாங்குப்பத்தில் தீ விபத்து; 5 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 9 July 2019 3:45 AM IST (Updated: 9 July 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து நாசமானது.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் சண்முகம் நகர் சுப்புராயன் வீதியை சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி லாரன்ஸ் மேரி (வயது 45). இவர்கள் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு லாரன்ஸ்மேரி வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்துவிட்டு தீயை அணைக்கவில்லையாம்.

இந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் அடுப்பில் இருந்து தீப்பொறி பறந்து குடிசையில் விழுந்து, தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாசு மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்து வெளியே ஓடினர்.

இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் உள்ள ஆரோக்கியமேரி, நகர்நிஷா, பன்னீர்செல்வம், ருக்குமணி ஆகியோரின் குடிசை வீடுகளுக்கும் பரவியது.

இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புதுச்சேரி, வில்லியனூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இதற்குள் வாசு உள்பட 5 பேரின் வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் மற்றும் துணிமணிகள் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

தீயை அணைக்கும் முயற்சியில் ஆரோக்கியமேரியின் கணவர் மணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தாசில்தார் ராஜேஷ்கண்ணா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தீ விபத்து குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாகூர் கிருஷ்ணாநகர் மேற்கு வீதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). இவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் மதியம் வெளியே சென்றிருந்த நிலையில் மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

தகவல் அறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பக்கிரி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து பாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story