பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் கடலூரில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூரில் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினரின் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
ரேஷன் கடையில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றி வரும் விற்பனையாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி வரும் செயலாளர்களை தமிழக அரசு பொது பணி நிலைத்திறன் அடிப்படையில் மாவட்ட அளவில் பணியிட மாற்றம் செய்யும் வகையில் அரசாணை வழங்கி, செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ய இருப்பதை தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் பேரணி நடத்தி, கலெக்டரிடம் மனு அளிக்க போவதாக அறிவித்து இருந்தனர்.
ஆனால் பேரணி நடத்த போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதையடுத்து கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாம்பசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார்.
இதில் சட்ட ஆலோசகர் பாண்டியன், மாவட்ட துணை தலைவர்கள் திருநாவுக்கரசு, சாந்தகுமார், மாவட்ட இணை செயலாளர்கள் வாசுகி, உமாமகேஸ்வரி, மண்டல இணை செயலாளர் சீனுவாசன், மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமிநாராயணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் அன்புசெல்வனிடம் நிர்வாகிகள் மனு அளித்து, இது பற்றி முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story