பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிக்கலான பிரசவத்துக்கு சிகிச்சை அளிக்க வசதி - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தகவல்


பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிக்கலான பிரசவத்துக்கு சிகிச்சை அளிக்க வசதி - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தகவல்
x
தினத்தந்தி 8 July 2019 11:00 PM GMT (Updated: 8 July 2019 11:45 PM GMT)

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிக்கலான பிரசவத்துக்கு சிகிச்சை அளிக்க நவீன கருவிகள் மூலம் வசதி செய்யப்படுவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் உள்ள அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் நோயாளிகள் வசதிக்காக பல்வேறு கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டிடப்பணிகளை சட்டப்பேரவைதுணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பார்வை யிட்டு ஆய்வுசெய்தார்.

அப்போது அவர் கட்டிடப் பணிகளை விரைவில் முடிக்கும்படி அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தையும் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர்அவர் கூறியதாவது:-

ரூ.8 கோடி மதிப்பீட்டில் 5 அடுக்குகொண்ட வெளிநோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. மேலும் ரூ.12 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அரங்கு கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டு கட்டிடப் பணிகள்நடை பெற்று வருகின்றன. இதற்கான நவீன கருவிகள் ரூ.20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிக்கலான பிரசவங்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். கோவை அரசு மருத்துவமனையில் கூட இது போன்ற வசதி இல்லை. இதன் மூலம் கோவை உள்பட அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெறும் நிலை ஏற்படும். ஆகவே இந்த வசதியை விரைவில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கூறினார்.

ஆய்வின் போது பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ஆர்.ரவிக்குமார், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் (பொறுப்பு) டாக்டர் கலைச்செல்வி, முதுநிலை டாக்டர் இ.ராஜா, பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், நோயாளிகள் நலக்குழு உறுப்பினர்கள் மூசா, நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் கோவை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பார்வையிட்டார். கல்லூரிக்கு செய்ய வேண்டியஅடிப்படை வசதிகள் குறித்து பேராசிரியர்கள், மாணவ மாணவிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், பொள்ளாச்சி எஸ்.ஆர்.ஐ.எம். மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் இந்த அரசு கலைக்கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட இப்பள்ளிக்கு அருகில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 8 கோடி நிதி பல்கலைக்கழக வங்கி கணக்கில் இருப்பில் உள்ளது. இன்னும் ஒருஆண்டிற்குள் வகுப்பறை கட்டிடப்பணி நிறைவடையும். இக்கல்லூரியில் கூட்டம் நடைபெறும் போது மாணவ-மாணவிகள் அமர இருக்கை வசதிகள் உள்பட அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என்றார். 

Next Story