ஊட்டியில், கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்


ஊட்டியில், கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2019 4:00 AM IST (Updated: 9 July 2019 5:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து வரும் செயலாளர்களை, பொது பணி நிலைத்திறன் அடிப்படையில் மாவட்ட அளவில் பணியிட மாற்றம் செய்ய பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக்கோரி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோதிலால் நேரு முன்னிலை வகித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 220 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் நேற்று பணிக்கு செல்லாமல் ஊட்டியில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், தற்போது வெளியான பதிவாளர் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட தலைவர் நடராஜன் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 4 ஆயிரத்து 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் செயலாளர்களை பணியிட மாற்றம் செய்தால், செயலாளருக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் சங்கத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று(நேற்று) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கடன் சங்கங்களில் பணிபுரியும் விற்பனையர்கள் மற்றும் பிற அலுவலக பணியாளர்கள் 10 முதல் 20 ஆண்டுகள் பணிபுரிந்து பதவி உயர்வுக்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். பொது பணி நிலைத்திறனை அமல்படுத்தினால் முற்றிலும் பதவி உயர்வுகள் பாதிக்கும் நிலை இருக்கிறது.

வணிக வங்கிகள் தாக்கத்தாலும், செயலாளர் பணியிட மாற்றத்தாலும் ஏற்படும் தொய்வு சங்கங்களை, மேலும் நலிவடைய செய்வதோடு பணியாளர்கள் சம்பளம் பெற முடியாத சூழ்நிலையுடன், பண இழப்பை சந்திக்கக்கூடிய ஆபத்து உள்ளது. சங்கங்களில் பணிபுரியும் செயலாளர்களின் சம்பள விகிதம் சங்கத்திற்கு சங்கம் வேறுபாடு உடையதாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணாமல் செயலாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டால், பணியாளர்கள் இடையே கடும் விரக்தியை ஏற்படுத்தும். எனவே செயலாளர்கள் பணியிட மாற்றத்தை நிறுத்தி வைத்து பணியாளர்கள் நலனை காத்திட வேண்டும். நீலகிரியில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், விவசாயிகளுக்கு கடன் வழங்குவது உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட பொருளாளர் ரவி, துணைத்தலைவர் மேத்யூ ஜான், இணை செயலாளர் பாபு, இந்துமதி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story