கடலில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண் அடையாளம் தெரிந்தது திருமணத்துக்கு உறவினர்கள் வற்புறுத்தியதால் விரக்தி
திருவொற்றியூரில் கடலில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண் அடையாளம் தெரிந்தது. பாலிடெக்னிக்கில் படித்து வந்த தன்னை, படிப்பை நிறுத்திவிட்டு திருமணத்துக்கு உறவினர்கள் வற்புறுத்தியதால் கடலில் குதித்து தற்கொலை செய்தது தெரிந்தது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் டோல்கேட் என்.டி.ஓ.குப்பம் அருகில் உள்ள கடற்கரையில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்த இளம்பெண் ஒருவர், திடீரென கடலரிப்பு தடுப்பு சுவர் மீது நடந்து சென்று கடலில் குதித்தார். இதுபற்றி கன்டெய்னர் லாரி டிரைவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மீனவர்கள் உதவியுடன் கடலில் குதித்த இளம்பெண்ணை போலீசார் தேடினர்.
ஆனால் 1 மணி நேரத்திற்கு பிறகு புதுவண்ணாரப்பேட்டை எஸ்.என்.செட்டி சாலை எதிரில் உள்ள கடற்கரையில் இளம்பெண்ணின் உடல் கரை ஒதுங்கியது. அவர் யார்?, எந்த ஊர்?, எதற்காக தற்கொலை செய்தார்? என காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் மணலி போலீஸ் நிலையத்தில் தனது பேத்தியை காணவில்லை என்று முதியவர் ஒருவர் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், முதியவர் மற்றும் அவரது உறவினர்களை அழைத்துச்சென்று ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் உடலை காட்டினர்.
அதைப்பார்த்த அந்த பெண்ணின் தாத்தா, அவர் காணாமல் போன தனது பேத்தி கர்லின் மேரி (வயது 17) என்று கூறி கதறி அழுதார். அவரிடம் போலீசார் மேலும் விசாரித்தனர்.
அதில், மணலி சன்னதி தெருவில் வசித்து வந்த கர்லின் மேரியின் தந்தை விக்டர் ஆமோஸ் லேசான மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் கர்லின் மேரியின் தாய், 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். தற்போது கர்லின் மேரி மற்றும் அவரது தம்பி மனோவா பிரான்சிஸ் இருவரையும் காவலாளி வேலை பார்த்து வரும் தாத்தா ஜெயசீலன்தான் படிக்க வைத்து வந்தார்.
தற்போது திருவொற்றியூர் மாட்டுமந்தை அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்த மாணவி கர்லின் மேரியை தொடர்ந்து படிக்க வைக்க முடியாததால் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்துகொள்ளும்படி உறவினர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கர்லின் மேரி, கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு கர்லின்மேரியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story