பொள்ளாச்சி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்த பெயிண்டர் கைது


பொள்ளாச்சி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்த பெயிண்டர் கைது
x
தினத்தந்தி 8 July 2019 10:45 PM GMT (Updated: 8 July 2019 11:45 PM GMT)

பொள்ளாச்சி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்த பெயிண்டரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி செரீப் காலனியை சேர்ந்தவர் அமானுல்லா (வயது 25). கிணத்துக்கடவு காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அமானுல்லா அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. மேலும் அமானுல்லாவின் நண்பர்களும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலால் மனவேதனை அடைந்த சிறுமி, நடந்த சம்பவங்கள் குறித்து தந்தையிடம் கூறினார். அதன்பிறகு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் கொடுத்தார். அதன் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கடந்த 6-ந்தேதி அமானுல்லா மற்றும் அவரது நண்பர்களான பொள்ளாச்சியில் உள்ள ஆண்டாள் அபிராமி நகரை சேர்ந்த பகவதி (26), ஜமீன்ஊத்துக்குளியை சேர்ந்த முகமது அலி (28), அழகாபுரி வீதியை சேர்ந்த டேவிட் செந்தில் (30), செரீப் காலனியை சேர்ந்த முகமது ரபீக் (28), மடத்துக்குளத்தை சேர்ந்த அருண்நேரு (28), குமரன் நகரை சேர்ந்த சையது முகமது (25), சி.டி.சி. காலனியை சேர்ந்த இர்ஷாத்முகமது (28), இர்ஷாத் பாஷா (28) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையாக கருதப்பட்ட பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதியை சேர்ந்த பெயிண்டர் வேலை பார்த்து வரும் பிரபு என்கிற மணிகண்டன் (22) என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னகாமணன், சந்திரன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தெப்பக்குளம் வீதி ஆட்டோ நிறுத்தம் அருகில் பிரபு பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பிரபுவை கைது செய்தனர். கைதான அவரை கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story