வடமதுரை அருகே பயங்கரம், கள்ளக்காதல் தகராறில் வாலிபர் காருடன் எரித்துக் கொலை


வடமதுரை அருகே பயங்கரம், கள்ளக்காதல் தகராறில் வாலிபர் காருடன் எரித்துக் கொலை
x
தினத்தந்தி 9 July 2019 4:45 AM IST (Updated: 9 July 2019 5:15 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் காருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த வேலாயுதம்பாளையம்-செங்குறிச்சி செல்லும் சாலையில் கணவாய்மேடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வடமதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து விட்டது. காரின் டிரைவர் சீட்டில் முழுவதும் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், ஞானசேகரன், வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் காரின் பதிவு எண்ணை வைத்து, காருக்குள் இறந்தவர் எரியோடு அருகே உள்ள கோவிலூரை சேர்ந்த மகாமுனி மகன் சிவா (வயது 25) என்பது தெரியவந்தது. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது தந்தை மகாமுனி நடத்தி வந்த ஓட்டலில் சிவா உதவியாக இருந்து வந்தார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கள்ளக் காதல் தகராறில் காரில் வைத்து அவரை எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இறந்தவரின் உடல் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்ததால், அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சென்று பிரேதப் பரிசோதனை செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் தகராறில் வாலிபர் ஒருவர் காருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story