நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா


நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 9 July 2019 11:00 PM GMT (Updated: 9 July 2019 2:55 PM GMT)

நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ராணிதோட்டம் பணிமனை முன் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு.) குமரி மாவட்ட கிளை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். 1–4–2003–க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பழைய பென்சன் திட்டத்தில் இணைப்பது அவசியம். 240 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாளிலேயே பணபலன் அனைத்தும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு தலைவர் சங்கர நாராயணன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் லெட்சுமணன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன், நெல்லை மண்டல பொது செயலாளர் ஜோதி மற்றும் சுரேஷ், ஸ்டீபன் ஜெயகுமார் உள்பட பலர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தர்ணா போராட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

Next Story