கட்சிக்கு எதிராக செயல்படும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதுடன் 6 ஆண்டு தேர்தலில் நிற்க தடை விதிக்க சபாநாயகரிடம் கோரிக்கை
கட்சிக்கு எதிராக செயல்படும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதுடன் 6 ஆண்டுகள், எந்த தேர்தலிலும் நிற்க தடை விதிக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்போம் என்று சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு,
கட்சிக்கு எதிராக செயல்படும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதுடன் 6 ஆண்டுகள், எந்த தேர்தலிலும் நிற்க தடை விதிக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்போம் என்று சித்தராமையா தெரிவித்தார்.
சித்தராமையா பேட்டி
கர்நாடக சட்டசபை காங்கிரஸ் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ராஜினாமா செய்த 10 பேர் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் மேலும் சிலர் பங்கேற்கவில்லை. அதற்கு அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். வருகிற 12-ந் தேதி சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. இதில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். மேலும் சட்டசபை கூட்டத்தில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.
21 மந்திரிகள் ராஜினாமா
தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தோம். காங்கிரசை காப்பாற்றும் நோக்கத்தில் எங்கள் கட்சியை சேர்ந்த துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட 21 மந்திரிகள் என்னிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். நாங்கள் கூட்டணி அரசை அமைத்தபோது, 20 மாதங்களுக்கு பிறகு மந்திரிசபையை மாற்றி அமைப்பது என்று முடிவு செய்தோம்.
அதனால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு வழிவிடும் நோக்கத்தில் மந்திரிகள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மந்திரிகள் ராஜினாமா செய்தாலும், அந்த கடிதம் கவர்னருக்கு அனுப்பும் வரை அவர்கள் மந்திரிகளாகவே நீடிப்பார்கள். கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள பா.ஜனதா அல்லாத அரசுகளை அகற்ற பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
கவர்னர் அனுமதி
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் பெரும்பான்மை ஆதரவு வழங்கவில்லை. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். ஆனால் சட்டசபையில் பெரிய கட்சி என்பதால், பா.ஜனதா ஆட்சிக்கு கவர்னர் அனுமதி வழங்கினார்.
பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால், எடியூரப்பா 3 நாட்களில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ஜனநாயக விரோத செயலில் பா.ஜனதா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 38 சதவீத ஓட்டுகள் பெற்றது. ஆனால் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா 37 சதவீத வாக்குகள்தான் பெற்றது. காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளுக்கு 57 சதவீத ஓட்டுகள் இருக்கிறது.
கட்சி தாவல் தடை சட்டம்
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் வழிகாட்டுதலில் கர்நாடக கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வழிகாட்டுதலில் தான் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறார்கள். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் மற்றும் மந்திரி பதவியை வழங்குவதாக பா.ஜனதா தலைவர்கள் ஆசை காட்டுகிறார்கள். இந்த பணம் பா.ஜனதா தலைவர்களுக்கு எங்கிருந்து வருகிறது.
சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் மற்றும் மத்திய அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கூட்டணி அரசை கவிழ்க்க திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இதன் காரணமாக எங்கள் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவின் வலையில் விழுந்துள்ளனர். கட்சி தாவல் தடை சட்டம் இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியுமா? என்பது எனக்கு தெரியவில்லை.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்
ஒரு கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சரியான காரணம் இல்லாமல் ராஜினாமா செய்தால், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எங்களின் கருத்துப்படி ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்யவில்லை.
அதன்படி, நாங்கள், கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளோம். அதன் பிறகு அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவர்கள் எந்த பதவியையும் வகிக்க முடியாது. அதனால் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வர வேண்டும் என்று நான் இப்போதும் கூட அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
சட்டப்படி செயல்படுவார்
அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணைப்படி சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது. அவர்களை தகுதி நீக்கம் செய்வது மட்டுமின்றி, அடுத்த 6 ஆண்டுகளில் அவர்களால் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாதவாறு தடை விதிக்குமாறு சபாநாயகருக்கு கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளோம். சபாநாயகருக்கு நாங்கள் கொடுக்கும் மனுவில் இந்த அம்சமும் இடம் பெற்றுள்ளது. சபாநாயகர் சட்டப்படி செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story