பெலகாவி மாவட்டத்தில் கனமழை கிருஷ்ணா - துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு தர்கா, கோவிலை வெள்ளம் சூழ்ந்தது


பெலகாவி மாவட்டத்தில் கனமழை கிருஷ்ணா - துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு தர்கா, கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 10 July 2019 3:30 AM IST (Updated: 9 July 2019 11:40 PM IST)
t-max-icont-min-icon

பெலகாவி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணா நதி மற்றும் அதன் துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு தர்கா மற்றும் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பெலகாவி, 

பெலகாவி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணா நதி மற்றும் அதன் துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு தர்கா மற்றும் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை உள்பட பல நகரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. அதேபோல் மராட்டியத்தையொட்டி அமைந்துள்ள கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பெலகாவி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

பலத்த மழையின் காரணமாக கிருஷ்ணா நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கிருஷ்ணா நதியின் துணை நதிகளான பெலகாவி மாவட்டத்தில் ஓடும் வேதகங்கா, தூதகங்கா, வஞ்சகங்கா ஆகிய நதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த நதிகளின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்துள்ளது

மேலும் பெலகாவி மாவட்டத்தில் மட்டும் இந்த நதிகளுக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 40 தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளன. இதில் குறிப்பாக சிக்கோடி தாலுகாவில் 6 தரைப்பாலங்களை ஆறுகள் மூழ்கடித்து கரைபுரண்டு ஓடுகின்றன. அதுமட்டுமல்லாமல் சிக்கோடி தாலுகாவிற்கு உட்பட்ட தூதகங்கா ஆற்றங்கரையில் உள்ள ஒரு தர்காவையும், வஞ்ச கங்கா ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் நரசிம்மவாடி கோவிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்துள்ள கல்லோலா, யடூரா, தூதகங்கா நதிக்கரையில் உள்ள காரதகா, போஜா, வேதகங்கா நதிக்கரையில் அமைந்துள்ள போஜவாடி, குன்னூரு, சித்னாலா, அக்கோலா, ஜதராடா, பீவசி, தூதகங்கா நதிக்கரையில் அமைந்திருக்கும் மலிகவாடா, தத்தவாடா ஆகிய கிராமங் களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அவர்கள் பல கிராமங்களைச் சுற்றி நகரப் பகுதிகளுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர்

இதுபற்றி பெலகாவி நீர்ப்பாசனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கிருஷ்ணா நதியிலும், அதன் துணை நதிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது கிருஷ்ணா நதியில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் தான் வந்து கொண்டிருக்கிறது. அதற்குள்ளாகவே பல தரைப்பாலங்கள் மூழ்கடிக்கப்பட்டு பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன. இன்னும் கிருஷ்ணா நதியில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும்.

அதனால் கிருஷ்ணா நதி, அதன் துணை நதிகள் மற்றும் சிக்கோடி தாலுகாவிற்கு உட்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும். அதற்கு அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வெள்ளப்பெருக்கினால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story