நகைக்கடை அதிபரிடம் ரூ.400 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு விசாரணைக்கு ஆஜராக ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீசு
பெங்களூருவில், நகைக்கடை அதிபரிடம் ரூ.400 கோடி வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு ஆஜராக கோரி ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பு விசாரணை குழு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூருவில், நகைக்கடை அதிபரிடம் ரூ.400 கோடி வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு ஆஜராக கோரி ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பு விசாரணை குழு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர். ரோஷன் பெய்க் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்த உடன் போலீசார் நோட்டீசு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
ரூ.400 கோடி கொடுத்ததாக...
பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவர், அதிகவட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1,640 கோடியுடன் தலைமறைவாகி விட்டார். துபாயில் அவர் பதுங்கி உள்ளார். இந்த மோசடி தொடர்பாக மன்சூர்கான் நகைக்கடையின் இயக்குனர்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர மன்சூர்கானிடம் லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு வடக்கு மண்டல உதவி கமிஷனர் எல்.சி.நாகராஜ், கிராம கணக்காளர் மஞ்சுநாத் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல, மன்சூர்கானிடம் ரூ.1.50 கோடி லஞ்சம் வாங்கியதாக நேற்று முன்தினம் பெங்களூரு மாவட்ட கலெக்டர் விஜய் சங்கரையும் சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்துள்ள னர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மன்சூர்கான் துபாய்க்கு தப்பி செல்வதற்கு முன்பாக வெளியிட்டு இருந்த ஆடியோவில், பொதுமக்களிடம் வசூலித்திருந்த ரூ.400 கோடியை சிவாஜிநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க்கிடம் கொடுத்திருப்பதாக கூறி இருந்தார்.
விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு
ஆனால் மன்சூர்கானின் குற்றச்சாட்டை ரோஷன் பெய்க் மறுத்திருந்தார். மேலும் அரசியல் காரணங்களுக்காக தன்மீது மன்சூர்கான் குற்றச்சாட்டு கூறுவதாகவும், இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார். இந்த நிலையில், ரூ.400 கோடி கொடுத்திருப்பதாக மன்சூர்கான் குற்றச்சாட்டு கூறி இருப்பதால், அதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பு விசாரணை குழு போலீசார் நேற்று நோட்டீசு அனுப்பினர்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ், நிருபர்களிடம் கூறுகையில், “ரூ.1,640 கோடி மோசடி செய்ததில் மன்சூர்கானிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.400 கோடி கொடுத்திருப்பதாக மன்சூர்கான் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரோஷன் பெய்க்கிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வருகிற 11-ந் தேதி (அதாவது நாளை) விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.
பதவி ராஜினாமா
இந்த நிலையில், சிவாஜிநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க் நேற்று காலையில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தார். அவரது ராஜினாமா உடனடியாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் ராஜினாமா செய்த உடன், இந்த மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீசு அனுப்பி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Related Tags :
Next Story