பெருந்துறை சிப்காட் அருகே தனியார் குளிர்பான தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


பெருந்துறை சிப்காட் அருகே தனியார் குளிர்பான தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 10 July 2019 5:15 AM IST (Updated: 10 July 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே தனியார் குளிர்பான தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெருந்துறை.

பெருந்துறை சிப்காட்டில் வரப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓடைக்காட்டூர் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி சிப்காட்டிற்குள் இயங்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், சாயம் ஏற்றும் தொழிற்சாலைகளும் ஏராளமாக உள்ளன.

இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும், கடந்த சில ஆண்டுகளாக குளத்திற்குள் சேகரமாகிறது. குளத்தில் சேர்ந்த திரவ கழிவுகள் தற்போது காய்ந்து, திடக்கழிவுகளாக மாறிவிட்டன.

இதன்காரணமாக குளத்தை நம்பி ஆதாரமாக இருந்த நூற்றுக்கணக்கான விவசாய கிணறுகளில் உள்ள தண்ணீரும் ரசாயன தண்ணீராக மாறிவிட்டது.

இந்த தண்ணீர் விவசாயத்துக்கோ மற்ற பயன்பாட்டுக்கோ பயன்படாத நிலையில் உள்ளது.

இந்தநிலையில் தற்போது சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தனியார் குளிர் பான தொழிற்சாலை தொடங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த தொழிற்சாலை அமைய உள்ள இடத்தின் அருகே கருக்கன்காட்டூர் என்கிற கிராமம் இருக்கிறது. மேற்படி குளிர் பான தொழிற்சாலை அமைந்தால் தங்களுடைய மண் வளம், நீர் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த ஊரைச்சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் ஒன்று கூடி அங்குள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

ஆலோசனை கூட்டத்தில், கருக்கன்காட்டூர் கிராமம் அருகே குளிர் பான தொழிற்சாலை அமைக்க அரசு அனுமதி அளிக்கக்கூடாது. மழைக்காலம் தொடங்க உள்ளதால், சிப்காட் அருகே உள்ள ஓடைக்காட்டூர் குளத்தில் தேங்கியுள்ள தொழிற்சாலை திடக்கழிவுகளை விரைவில் அகற்றி, அக்குளத்தை தூர் வார வேண்டும்.

குளத்தில் மழைநீர் சேர்ந்த பின்னர் தொழிற்சாலை சாயக்கழிவுகள், இக்குளத்தில் தேங்காமல் இருக்க, சிப்காட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் வருகிற 12-ந் தேதி மாவட்ட கலெக்டர் கதிரவனை சந்தித்து, இது குறித்த கோரிக்கை மனு கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Next Story