புஞ்சைபுளியம்பட்டியில் மின்கம்பத்தை உடைத்து மளிகை கடைக்குள் புகுந்த கார்; 2 பேர் காயம்


புஞ்சைபுளியம்பட்டியில் மின்கம்பத்தை உடைத்து மளிகை கடைக்குள் புகுந்த கார்; 2 பேர் காயம்
x
தினத்தந்தி 10 July 2019 4:00 AM IST (Updated: 10 July 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டியில் மின்கம்பத்தை உடைத்து மளிகை கடைக்குள் கார் புகுந்தது. இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தார்கள்.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ். அவருடைய நண்பர் கார்த்தி. இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் காரில் வீட்டில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி பஸ்நிலையத்துக்கு சென்றுகொண்டு இருந்தார்கள். காரை சந்தோஷ் ஓட்டினார்.

அண்ணாமலையார் கோவில் அருகே ஒரு சிறிய பாலத்தில் கார் சென்றபோது நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. பின்னர் நிற்காமல் பாலத்தை கடந்து ரோட்டு ஓரத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து விழுந்தது. அதன்பின்னரும் கார் நிற்காமல் அங்கிருந்த ஒரு மளிகை கடையின் முன்பகுதியில் புகுந்து நின்றது.

இதில் கார் சேதமடைந்தது. இடிபாடுகளில் சிக்கிய சந்தோசும், கார்த்தியும் காயமடைந்தார்கள். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.

கார் கடைக்குள் புகுந்ததில் சிமெண்டு ஓடால் வேயப்பட்டு இருந்த கூரை, ஷட்டர், பொருட்கள் வைக்கும் மர ஸ்டாண்டு ஆகியவை சேதமடைந்தன.

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story