காதலன் திருமணம் செய்ய மறுப்பு, திண்டுக்கல் கலெக்டர் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் என்ஜினீயர்


காதலன் திருமணம் செய்ய மறுப்பு, திண்டுக்கல் கலெக்டர் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் என்ஜினீயர்
x
தினத்தந்தி 9 July 2019 11:00 PM GMT (Updated: 9 July 2019 6:59 PM GMT)

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் திண்டுக்கல் கலெக்டர் வீட்டு முன்பு பெண் என்ஜினீயர் தீக்குளிக்க முயன்றார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தின் முன்பு, மாவட்ட கலெக்டரின் வீடு அமைந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை ஒரு இளம்பெண் உள்பட 3 பேர் கலெக்டர் வீட்டின் முன்பு வந்தனர். பின்னர் அந்த இளம்பெண் திடீரென பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்தனர். இதனால் அந்த பெண் உள்பட 3 பேரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் வடக்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர். அதில் அவர், திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த திவ்யரோஸ்லின் (வயது 24) என்பதும், உடன் வந்தவர்கள் அவருடைய தந்தை பிரான்சிஸ் மற்றும் தாயார் பெமினாமேரி என்பதும் தெரியவந்தது. மேலும் போலீசாரிடம், இளம்பெண் திவ்யரோஸ்லின் கூறியதாவது:-

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் நான் பி.இ. படித்துள்ளேன். நான் கல்லூரியில் படித்த போது, அதே கல்லூரியில் பழனி திருநகரை சேர்ந்த ஒரு மாணவரும் படித் தார். எங்கள் 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. என்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறி, அவருடைய வீட்டுக்கு என்னை அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார்.

இந்த நிலையில் தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். எனவே, காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளேன். எனினும், காதலரை என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் தீக்குளிக்க முயன்றேன்.

இவ்வாறு அவர், போலீசாரிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து திவ்யரோஸ்லின் புகார் தொடர்பாக திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story