திருப்புறம்பியம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு


திருப்புறம்பியம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 July 2019 10:30 PM GMT (Updated: 9 July 2019 7:12 PM GMT)

திருப்புறம்பியம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கபிஸ்தலம்,

சுவாமிமலை அருகே திருப்புறம்பியம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழா கடந்த மாதம் (ஜூன்) 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவு, படுகளம் பார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. இதையொட்டி திரவுபதி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது தீக்குண்டம் இறங்கும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மண்ணியாற்றங்கரையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. கோவிலில் ஊர்வலம் நிறைவடைந்ததும், திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர்.

ஏற்பாடுகள்

விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர். விழாவையொட்டி சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story