குளங்களில் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் - கலெக்டர் ராஜாமணி தகவல்
குளங்களில் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார் இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை,
தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி, ஆழப்படுத்தும் நோக்கத்திலும், ஏரி குளங்களில் விவசாயத்திற்கு தேவையான வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி பதிவு செய்யப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் சொந்த தேவை மற்றும் விவசாயிகளின் விவசாய தேவைக்கு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகளில் இருந்து களிமண், வண்டல் மண், சவுடு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
அரசு விதிகளின்படி விவசாயிகள் விவசாய தேவைக்கு வண்டல் மண், களிமண், நன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 75 கனமீட்டரும், (25 டிராக்டர்) புன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 90 கனமீட்டரும் (30 டிராக்டர்) மற்றும் இதர சொந்த பயன்பாட்டிற்கு மண் சவுடு கிராவல் ஆகியவை 30 கனமீட்டர் (10 டிராக்டர்) மற்றும் மண்பாண்டங்கள் செய்பவர்களுக்கு 60 கனமீட்டர் (20 டிராக்டர்) ஆகியவை இலவசமாக எடுத்துச் செல்ல அந்தந்த பகுதி தாசில்தார்களால் அனுமதி வழங்கப்படுகிறது.
வண்டல் மண் மிகுதியாக உள்ள ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் புதிதாக கண்டறியப்பட்டு விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நீர் நிலைகளில் இலவசமாக வண்டல் மண், களிமண் ஆகியவை வெட்டி எடுக்கும் போது அந்த நீர்நிலைகள் தூர்வாரி ஆழப்படுத்துவதால் மழைக்காலங்களில் கூடுதலான மழைநீரை சேமிக்க இயலும்.
ஏரி, குளங்களில் வெட்டி எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய நிலங்களில் கொட்டும் போது அது மண்ணிற்கு சிறந்த வளத்தை கொடுக்கும். மேலும் ரசாயனம் கலந்த செயற்கை உரங்களை பயன்படுத்துவதை குறைத்து விளைச்சலை அதிகரிக்க செய்கிறது.
எனவே, இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story