அரியமங்கலம் குப்பை கிடங்கில் 2-வது நாளாக பற்றி எரியும் தீ புகை மூட்டத்தால் வீடுகளை காலி செய்த பொதுமக்கள்


அரியமங்கலம் குப்பை கிடங்கில் 2-வது நாளாக பற்றி எரியும் தீ புகை மூட்டத்தால் வீடுகளை காலி செய்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 9 July 2019 11:00 PM GMT (Updated: 9 July 2019 7:26 PM GMT)

அரியமங்கலம் குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீப்பற்றி எரிவதால் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்கள் வீடுகளில் அப்பகுதி மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு நாளொன்றுக்கு திருச்சி மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சுமார் 400 டன் வரை கொட்டப்படுகிறது. இதனால், குப்பைகள் மலைபோல தேங்கி கிடக்கிறது. இந்த குப்பை கிடங்கில் காற்று காலத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது உண்டு.

இந்நிலையில் நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் தீப்பற்றியது. அந்த பகுதியில் காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி பெரும் தீ விபத்தாக மாறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது.

திருச்சி கண்டோன்மெண்ட், நவல்பட்டு, ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி லாரிகள் உள்பட 15 வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. 3 பொக்லைன் எந்திரங்களும் வரவழைக்கப்பட்டு குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளன. தீயணைப்பு வீரர்களும், மாநகராட்சி ஊழியர்களும் கடுமையாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. கடுமையான புகை மூட்டத்தால் அப்பகுதி குடியிருப்புவாசிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதி அடைந்தனர்.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் சிரமமாக உள்ளது. நேற்று 2-வது நாளாக குப்பை கிடங்கில் தொடர்ந்து தீ பற்றி எரிந்தது. இதனால், திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் புகை மூட்டத்தில் சிக்கித் தவித்தன. குப்பை கிடங்கு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்த குடியிருப்பு மக்கள் புகை மூட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும், மாநகராட்சி ஊழியர்களும் இரவு-பகலாக போராடி வருகின்றனர்.

Next Story