மாவட்ட செய்திகள்

“மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்”: பேராசிரியை நிர்மலாதேவி குறித்து மீண்டும் ஒரு ஆடியோ உரையாடல் + "||" + Take the psychiatrist: Professor Nirmaladevi An audio conversation again

“மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்”: பேராசிரியை நிர்மலாதேவி குறித்து மீண்டும் ஒரு ஆடியோ உரையாடல்

“மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்”: பேராசிரியை நிர்மலாதேவி குறித்து மீண்டும் ஒரு ஆடியோ உரையாடல்
பேராசிரியை நிர்மலாதேவி பேசுவது போன்று மீண்டும் ஒரு ஆடியோ உரையாடல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தன்னை மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்லுமாறும் அவர் கேட்பது போன்று அந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருடன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்து உள்ளனர்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜரான நிர்மலாதேவி கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து கொண்டு அங்கிருந்து செல்ல மறுத்தார். கண்ணை மூடி தியானம் செய்வது போல் அமர்ந்து, தன் மீது புகார் கொடுத்தவர்கள் தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும், தன்னை சாமிதான் காப்பாற்றியது என்றும் ஏதேதோ கூறினார். கோர்ட்டு ஊழியர்கள் அவரை வெளியேறுமாறு கூறியும் அவர் செல்ல மறுத்து கண்ணை மூடிக்கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்.

இறுதியில் போலீசார் கைது செய்ய வருவதாக கூறியதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறினார். பின்னர் அருப்புக்கோட்டைக்குச் சென்ற அவர் தனது வீட்டுக்குச் செல்லாமல் அங்குள்ள பள்ளிவாசலுக்குள் தலைவிரி கோலத்துடன் திடீரென நுழைந்து அங்கும் ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்த போலீசார் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றி வீட்டுக்கு கொண்டு போய் விட்டனர்.

இதனிடையே நேற்று நிர்மலாதேவி ஒருவரிடம் பேசியதாக ஒரு ஆடியோ உரையாடல் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியானது. அதில் நிர்மலாதேவி பேசியதாக இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-

நான் கோபமாக பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். ஏனென்றால் கொஞ்ச நாளாக நான் நானாகவே இல்லை. அது ஆன்மீக ரீதியாக நடந்ததா என்று தெரிய வில்லை.

2 நாட்களுக்கு முன்புதான் தஞ்சையில் மன நல மருத்துவரிடம் சென்றேன். இப்போ தினமும் ஒவ்வொரு கூத்தாக நடந்து கொண்டிருக்கிறது. தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நல்ல மனநல மருத்துவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். நெல்லையாக இருந்தாலும் சரி, மதுரையாக இருந்தாலும் சரி, தயவு செய்து உடனே அழைத்துச் செல்லுங்கள்.

தினமும் பெரிய, பெரிய பிரச்சினையாக வருகிறது. இப்போதே தயாராக இருக்கிறேன். உடனே பேசிவிட்டு சொல்லுங்கள். நான் எப்போதும் அந்த மாதிரி நடந்து கொண்டதே கிடையாது. மனநெருக்கடியால் தினமும் நான் மோசமான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். உடனே பேசிவிட்டுச் சொல்லுங்கள், டாக்டரிடம் சிகிச்சை பெறுவதற்கு நான் தயாராக இருக்கிறன்.

இவ்வாறு நிர்மலாதேவி பேசுவதாக உரையாடல் உள்ளது. அதற்கு எதிர்முனையில் பேசியவர், நான் நெல்லையில் ஒரு டாக்டரிடம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுகிறார்.

நிர்மலாதேவி மனஅழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறாரா? அதன் காரணமாகத்தான் கோர்ட்டு வளாகத்திலும், பள்ளிவாசலிலும் நேற்று முன்தினம் அவ்வாறு நடந்து கொண்டாரா? தற்போது வெளியாகி இருக்கும் ஆடியோ அவருடையதுதானா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவர் மீதான வழக்கு மதுரை ஐகோர்ட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் உள்ள நிலையில், தனக்கு மனநெருக்கடி இருப்பதாக அவர் கூறுவதாக வெளியான ஆடியோ உரையாடல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.