ராமேசுவரத்தில் இந்த ஆண்டே அரசு கலைக்கல்லூரி தொடங்க வேண்டும்; தாசில்தாரிடம் கோரிக்கை மனு


ராமேசுவரத்தில் இந்த ஆண்டே அரசு கலைக்கல்லூரி தொடங்க வேண்டும்; தாசில்தாரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 10 July 2019 4:45 AM IST (Updated: 10 July 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இந்த ஆண்டே அரசு கலைக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு வந்து தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவு மக்கள் நல பேரவையின் தலைவர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் பொது மக்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தாசில்தார் அப்துல்ஜபாரிடம் மனு ஒன்று கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- ராமேசுவரம் தீவில் மீனவர்கள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள மக்களுக்கு மருத்துவம், உயர்கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. தீவில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல நூறு கிலோ மீட்டர் தூரம் சென்று தான் உயர் கல்வி பயில வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் டாக்டர் அப்துல் கலாம் பெயரில் 2019-ம் ஆண்டு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கல்லூரி தொடங்குவதற்கான எந்த ஒரு சாத்தியக்கூறும் இல்லாதது அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. எனவே இப்பகுதி மாணவர்களின் நலன் கருதி ராமேசுவரத்தில் இந்த ஆண்டே கல்லூரி துவங்க மாவட்ட நிர்வாகம் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் ராமேசுவரத்தில் புதிய அரசு கலைக்கல்லூரி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு முன்பாக தற்காலிகமாக ஒரு கட்டிடத்தில் இன்னும் 1 வாரத்தில் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story