ஆசிரியரை கொலை செய்தது ஏன்? கைதான மைத்துனர் பரபரப்பு வாக்குமூலம்
ஆசிரியரை கொலை செய்தது ஏன்? என்று கைதான மைத்துனர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
விளாத்திகுளம்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (வயது 40). இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கிரேசி (29). இவர்களுடைய மகள் ரோசி ஏஞ்சல் (4). இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கிரேசி தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து, மகளுடன் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் உள்ள தந்தை ராஜமாணிக்கத்தின் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வடிவேல் முருகன் பள்ளிக்கூடத்தில் இருந்தபோது, கிரேசியின் தம்பியான என்ஜினீயர் அற்புதசெல்வன் என்ற ஆஸ்டின் (26) அங்கு சென்றார். அவர் செல்போனில் வடிவேல் முருகனை தொடர்பு கொண்டு, பள்ளிக்கு வெளியே வருமாறு அழைத்தார். சிறிதுநேரத்தில் பள்ளிக்கு வெளியே வந்த வடிவேல் முருகனிடம் அற்புத செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் வடிவேல் முருகனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் வடிவேல் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அற்புதசெல்வனை கைது செய்தனர்.
அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
என்னுடைய அக்காள் கிரேசி நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக தாய்மாமன் வடிவேல் முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். ஆனால் வடிவேல் முருகன் என்னுடைய அக்காளை விட்டு பிரிந்து, விவாகரத்தான மற்றொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். கிரேசியுடன் சேர்ந்து வாழுமாறு பல முறை வடிவேல் முருகனிடம் கூறி வந்தோம். ஆனால் வடிவேல் முருகன் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.
எனினும் கடைசியாக ஒருமுறை வடிவேல் முருகனிடம் நேரில் சென்று, என்னுடைய அக்காளுடன் சேர்ந்து வாழுமாறு கூறினேன். ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வடிவேல் முருகனை சராமாரியாக குத்திக் கொலை செய்தேன்.
இவ்வாறு அற்புதசெல்வன் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அற்புதசெல்வனை போலீசார் நேற்று இரவில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story