வேன் - லாரி மோதல், ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் உள்பட 3 பேர் பலி


வேன் - லாரி மோதல், ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 10 July 2019 4:45 AM IST (Updated: 10 July 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

வேன், லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பொள்ளாச்சி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை-தாராபுரம் ரோடு சிவசக்தி காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 62). இவர் ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர். இவர் மனைவி பேபி கமலம் (52). இவரது தங்கை ஜோதிமணி (46). இந்த நிலையில் ஜோதிமணி நீண்ட நாட்களாக கால் வலிக்கு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததார். நேற்று மதியம் கோவை ஆஸ்பத்திரிக்கு செல்ல அவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக ஒரு வாடகை வேனில் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை உடுமலையை அடுத்த சாரளப்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (35) ஓட்டினார். பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் கோலார்பட்டியை தாண்டி பொள்ளாச்சி நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள சுங்கம் பகுதியில் வந்த போது, வேன் மீது எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று நேருக்குநேர் மோதியது.

இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. மோதிய வேகத்தில் சரக்கு லாரி ரோட்டில் வலதுபுறத்தில் புதருக்குள் புகுந்தது. வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பத்குமார், டிரைவர் வேலுச்சாமி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயம் அடைந்த பேபி கமலம், ஜோதிமணி, சரக்கு லாரி டிரைவர் தேனி மாவட்டம் போயர் வீதியை சேர்ந்த ஆனந்த் (29) ஆகியோரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பேபி கமலம் பரிதாபமாக இறந்தார்.

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஆனந்த், ஜோதி மணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Next Story