ஏர்வாடி அருகே கொலை செய்யப்பட்ட தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம், நாடார் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தல்
ஏர்வாடி அருகே கொலை செய்யப்பட்ட தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் நாடார் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
நெல்லை,
நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ், நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், செயலாளர் சண்முகவேல், பொருளாளர் செல்வராஜ், துணைத்தலைவர் முருகேச பாண்டியன், துணை செயலாளர் ரத்தினராஜ் உள்பட பலர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து பேசினர். பின்னர் அவரிடம் கோரிக்கை மனுவும் கொடுத்தனர். அதில் கூறிஇருப்பதாவது:-
ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரியில் ஆறுமுகப்பெருமாள் நாடார் மகன் தொழிலாளியான செல்வக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ளார். மேலும் பெரும்பத்து கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பக்கத்து ஊரான இளந்தோப்பு பகுதியில் உள்ள கனகராஜ் என்பவரின் வீடும் சூறையாடி உள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் கோதைசேரி ரோட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அமர்ந்து மது குடிப்பது, சீட்டு விளையாடுவதுடன், அந்த வழியாக செல்லும் பெண்களையும், பள்ளி, கல்லூரி மாணவிகளையும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். அந்த சமுதாயத்தினர் வசிக்கும் தெருவில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளதால், இரவு நேரத்தில் டிரான்ஸ்பார்மரை அணைத்து விட்டு நாடார் தெருவுக்குள் சென்று அடிதடியில் ஈடுபடுகின்றனர். எனவே நாடார் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்குள் தனியாக டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும். ஏர்வாடியில் இருந்து கோதைசேரிக்கு பஸ் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும்.
கொலை செய்யப்பட்ட செல்வக்குமார் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கோதைசேரி நாடார் இன மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக கரிக்கோல்ராஜ் கூறுகையில், “நெல்லை மாவட்டத்தில் மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இதை யாரும் தடுக்க கூடாது என்பதற்காக ஆங்காங்கே கொலை சம்பவங்களை நடத்தி பொது மக்களை அச்சுறுத்துகின்றனர். எனவே மணல் கொள்ளையை தடுக்க போலீசாரும், வருவாய் துறையும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக கலெக்டரை சந்திப்பதற்காக நாடார் சங்க பிரதிநிதிகள் வந்த போது, கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், குறிப்பிட்ட நபர்கள் தவிர அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர். இதையடுத்து அவர்கள் கலெக்டரை சந்திக்காமல் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள தட்சணமாற நாடார் சங்க அலுவலகத்துக்கு சென்று விட்டனர். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்துச்சென்றனர்.
Related Tags :
Next Story