காரிமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் என்ஜினீயர் கைது பெண்கள் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


காரிமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் என்ஜினீயர் கைது பெண்கள் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 July 2019 4:00 AM IST (Updated: 10 July 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே முட்புதரில் அழுகிய நிலையில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த என்ஜினீயரை காரிமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்- கிருஷ்ணகிரி சாலையில் கும்பாரஅள்ளி அருகே கடந்த மாதம் 7-ந்தேதி முட்புதரில் உடல் அழுகிய நிலையில் ஒரு பெண் பிணமாக கிடந்தார். அவருடைய கையில் இருந்த சிலுவை உருவம் பதித்த மோதிரம் எங்கே வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்தபோது பெங்களூருவில் வசிக்கும் சுவேதாபிரியா என்ற பெண் அந்த மோதிரத்தை வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த மோதிரத்தை தனது தாய் வசந்தாமேரி அணிந்திருப்பதாக சுவேதாபிரியா தெரிவித்தார். அதனால் முட்புதரில் பிணமாக கிடந்தது வசந்தாமேரி (வயது 55) என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காரிமங்கலம் அகரம் பிரிவு ரோட்டில் காரிமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது காரில் இருந்த ஆசாமி போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவன் பெங்களூரு அருகே உள்ள தாவணிக்கரையை சேர்ந்த சென்னப்பா என்பவரின் மகன் மனோகரா(32), என்ஜினீயர் என்பது தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரித்ததில் கடந்த மாதம் 7-ந்தேதி காரிமங்கலம் அருகே முட்புதரில் அழுகிய நிலையில் இருந்த பெண்ணை தானும், திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவன் ஒப்பு கொண்டான்.

இதுதொடர்பாக அவன் போலீசாரிடம் மேலும் கூறியதாவது:-

பெங்களூரு அடுத்த கனகசுக்கி பகுதியை சேர்ந்த இரவு விடுதி நடன அழகி லதா(எ) பிரீத்தி மற்றும் அவரது தோழி அனு(எ) சுவேதா ஆகியோருடன் எனக்கு நெருக்கமான உறவு இருந்தது. அப்போது லதாவின் தொழிலுக்கு இடையூறாக இருப்பதாக அதே பகுதியை சேர்ந்த வசந்தாமேரியை கொலை செய்ய வேண்டும் என்று என்னிடமும், திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடமும் லதா கூறினார். அதற்கு ஒப்புக்கொண்ட நாங்கள் கடந்த மாதம் 6-ந்தேதி மாண்டியாவுக்கு லதாவுடன் சுற்றுலா சென்றிருந்த வசந்தாமேரியை கழுத்தை நெரித்து கொன்றோம். பின்பு ஒரு சொகுசு காரில் வசந்தாமேரியின் உடலை போட்டு கொண்டு காரிமங்கலம் வந்து ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோரம் முட்புதரில் பிணத்தை வீசிவிட்டு சென்றோம் என்று கூறினார். இதையடுத்து மனோகராவை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த லதா என்கிற பிரீத்தி, அனு என்கிற சுவேதா மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story