பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் சேர இன்று சிறப்பு முகாம் - கலெக்டர் அறிக்கை
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் சேர இன்று(புதன்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது என்று கலெக்டர் அன்பு செல்வன் கூறி உள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டமானது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகள் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.
இப்போது இத்திட்டம் சிறு, குறு, நடுத்தரம், பெரிய என்ற வரையரை இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, உயா்வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரால் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்கலாம்.
மேலும், வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசு தாரர்களும் இத்திட்டத்தில் சேரலாம். இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர், சம்பந்தப்பட்ட பகுதியின் தாசில்தாரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
இது தொடர்பாக இன்று(புதன்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வருவாய் கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று தங்களுடைய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சேமிப்பு வங்கி கணக்கு எண் மற்றும் நில சிட்டா போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story