சேலம் அருகே நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல், வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி கொலை - 2 பேர் கைது, பரபரப்பு தகவல்கள்


சேலம் அருகே நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல், வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி கொலை - 2 பேர் கைது, பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 10 July 2019 4:15 AM IST (Updated: 10 July 2019 6:00 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே தனியார் கிரானைட்டில் பிணமாக கிடந்த வாலிபர் சாவில் துப்பு துலங்கியது. நண்பன் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பனமரத்துப்பட்டி,

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியில் தனியார் கிரானைட் நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இங்கு கடந்த 7-ந்தேதி இரவு ஒடிசா மாநிலம் பர்ஹட் மாவட்டத்தை சேர்ந்த கிஷோர் ஜால் (வயது 26) என்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி பனமரத்துப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிஷோர்ஜாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கிஷோர் ஜாலுடன் தங்கியிருந்த மற்ற வட மாநில வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது கிஷோர் ஜால் மற்றும் அவரது நண்பர்கள் சக்ரதவாஜ் புருவா (37), மகாதேவ் (வயது 26) ஆகியோர் அன்று இரவு தாங்கள் தங்கி இருந்த பகுதிக்கு அருகில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி விட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் என மற்ற தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சக்ரதவாஜ் புருவா, மகாதேவ் ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கிஷோர் ஜாலுக்கும் அவரது நண்பர் சக்ரதவாஜ் புருவாவின் மனைவி புஷ்பாஞ்சலி என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதுபற்றி சக்ரதவாஜ் புருவாவுக்கு தெரியவந்தது. இதன்பின்னர் அவர் கிஷோர்ஜாலிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதையடுத்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சக்ரதவாஜ் புருவா ஆத்திரம் அடைந்து கிஷோர் ஜாலை கல்லால் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த கிஷோர் ஜால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சக்ரதவாஜ் புருவாவை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மகாதேவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்காதல் விவகாரத்தில் வட மாநில வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப் படுகிறது.

Next Story