மாவட்டத்தில், நீர்நிலைகளில் மத்திய குழு ஆய்வு - விவசாயிகள் சரமாரி புகார்
சேலம் மாவட்டத்தில் நீர்நிலைகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
ஓமலூர்,
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கொள்கை மற்றும் திட்ட இணை செயலாளரும், மத்திய ஆய்வுக்குழு தலைவருமான திருப்புகழ் மற்றும் குழுவினர் நேற்று சேலம் மாவட்டத்தில் நீர்நிலைகளை பார்வையிட்டு ஆய்வுகள் செய்தனர். அப்போது கலெக்டர் ராமன் உடன் சென்றார்.
இந்த குழுவினர் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு திட்டப்பணிகள், ஏரிகள், குளங்களில் செய்யப்பட்டுள்ள நீர் மேலாண்மை திட்டப்பணிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள வடமனேரியை ஆய்வு செய்தனர். ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் செய்யப்பட்டுள்ள நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் தொடர்பான மேம்படுத்தும் பணிகளின் விவரங்களை குழுவிடம் அதிகாரிகள் எடுத்து கூறினர்.
அப்போது அங்கு மத்திய குழுவிடம் விவசாயிகள் கூறியதாவது:-
ஏரி, கால்வாய்களில் பல இடங்களில் பணிகள் நடைபெறாமல் உள்ளது. ஆனால் பணிகள் நடந்த இடங்களை மட்டும் அதிகாரிகள் அழைத்து சென்று உங்களுக்கு (மத்திய குழுவிற்கு) காண்பிக்கிறார்கள். ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் ஏரிகள், குளங்கள், ஆறுகளில் நீர் மேலாண்மை திட்டங்கள் முறையாக செயல்படுத்தவில்லை. அதனால்தான் மழைநீர் இந்த நீர்நிலைகளுக்கு செல்லாமல் வீணாகிறது. ஓமலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.
இவ்வாறு விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
அதற்கு பதில் அளித்த மத்திய குழுவினர், மழைநீர் சேகரித்தல், நீர் மேலாண்மை மற்றும் செரிவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்படும், என்றனர்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் அன்னதானபட்டி, வடுகப்பட்டி, சன்னியாசிப்பட்டி, மொத்தையனூர், ஆலத்தூர், சங்ககிரி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கசிவுநீர்குட்டை, பண்ணைக்குட்டை, உருச்சிகுழி, தடுப்பணை, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் டெல்லி மத்திய அரசு நிறுவனமான ஜல்சக்தி அபியான் இயக்க நீர்மேலாண்மை துறை அதிகாரி பிரகளதாஸ் தலைமையில் திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சங்ககிரி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரவிச்சந்திரன், அனுராதா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் மாது, உதவி பொறியாளர்கள் அன்புராஜ், காணீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story