தனது மகளுக்கு கல்வி கட்டணம் கட்ட ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் லஞ்சம் கேட்ட வட்டார கல்வி அலுவலர்


தனது மகளுக்கு கல்வி கட்டணம் கட்ட ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் லஞ்சம் கேட்ட வட்டார கல்வி அலுவலர்
x
தினத்தந்தி 10 July 2019 4:00 AM IST (Updated: 10 July 2019 6:00 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ஊதிய பலனுக்கான ஆணை வழங்க தனது மகளுக்கு கல்வி கட்டணம் கட்ட லஞ்சம் கேட்ட வட்டார கல்வி அலுவலரின் பேச்சு வாட்ஸ் அப்பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர், 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையின பள்ளிகள் பல உள்ளது. இந்த பள்ளிகள் மாதனூர் வட்டார கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ஆம்பூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றதற்காக அரசிடம் இருந்து ஓய்வூதிய பலனுக்கான ஆணைகள் வந்துள்ளது.

அந்த ஆணை வந்துள்ளதாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை வட்டார கல்வி அலுவலர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துவிட்டு அதற்கு பிரதிபலனாக தன்னுடைய எதாவது ஒரு கடனை அடைக்க வேண்டும். இல்லையெனில் தன்னுடைய மகளின் படிப்புக்கான கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டுமென அவர் பேசிய ஆடியோ தற்போது ‘வாட்ஸ் அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில் இடம் பெற்றுள்ள உரையாடல் வருமாறு:-

தலைமை ஆசிரியர்: அய்யா வணக்கம்

கல்வி அலுவலர்: சார் உங்கள் பள்ளி ஆசிரியருக்கு சாங்ஷன் ஆகி வந்திருக்கு.

தலைமை ஆசிரியர்: ரொம்ப சந்தோஷம், நல்ல செய்தி கொடுத்து இருக்கீங்க

கல்வி அலுவலர்: அவங்களுக்கு சூப்பர் ஆன்னுவேஷன் கொடுத்திருக்கா?

தலைமை ஆசிரியர்: கொடுத்து இருக்கு. 6, 8 மாதம் கொடுத்து இருக்கு. சூப்பர் ஆன்னுவேஷன், பே எல்லாம் சாங்ஷன் ஆகி சம்பளம் எல்லாம் கொடுத்து இருக்கு.

கல்வி அலுவலர்: இப்போ அவங்களுடைய சாங்ஷன் ஆர்டர் வந்திருக்கு.

தலைமை ஆசிரியர்: அந்த டீச்சரை கூப்பிட்டு பேசுறேன். அவங்களுக்கு ஒரு காப்பி வரும்லே.

கல்வி அலுவலர்: ஆம். வரும்

தலைமை ஆசிரியர்: இப்போ அவங்க லைனில் போயிட்டு பேசிட்டு வர்றேன்.

கல்வி அலுவலர்: நிறைய வருதுங்க அரியர், நீங்கதான் பாக்கணும்

தலைமை ஆசிரியர்: கண்டிப்பா.

கல்வி அலுவலர்: அவங்களால் ஏதாவது ஒரு கடன்...

தலைமை ஆசிரியர்: புரிந்தது, புரிந்தது.

கல்வி அலுவலர்: கடன் தீர்க்கட்டும், இல்லனா ஏதாவது ஒரு பாப்பாவிற்கு பீஸ் கட்ட பாருங்க, நிறைய வருதுங்க பாருங்க.

என அந்த உரையால் முடிகிறது.

வாட்ஸ் அப்பில் நேற்று பரவிய இந்த ஆடியோ கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆடியோவில் பேசிய வட்டார கல்வி அலுவலர் மீது ஆம்பூர் பகுதியில் உள்ள ஆசிரியர்கள் பல்வேறு புகார்கள் கூறுகின்றனர். அவர்கள் கையெழுத்து வாங்க சென்றால் பணம் இல்லாமல் போடுவது இல்லை என்றும், இல்லையெனில் அவரது காருக்கு டீசல் போட வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலர் லதாவிடம் கேட்டபோது விசாரிப்பதாக கூறினார்.

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம், வட்டார கல்வி அலுவலர் தனது மகளுக்கு கல்வி கட்டணமோ அல்லது கடனையோ அடைக்க சொல்லி இருக்கும் ஆடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story