ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.8 கோடியில் 226 குடிநீர் திட்டப் பணிகள் - கலெக்டர் தகவல்


ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.8 கோடியில் 226 குடிநீர் திட்டப் பணிகள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 10 July 2019 4:00 AM IST (Updated: 10 July 2019 6:02 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.8 கோடி செலவில் 226 குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் 'ஜல் சக்தி அபியான்' என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நீர்மேலாண்மை திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் 2018-19-ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.8 கோடியே 79 லட்சத்து 33 ஆயிரம் செலவில் 226 குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீர்மேலாண்மை தொடர்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சி பகுதிகளில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் 320 பண்ணைக் குட்டைகள் மற்றும் 567 தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், 65 ஆயிரத்து 69 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 13 சிறு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையின் மூலம் 78 கண்மாய்களும், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 90 குளங்களும் தூர்வாரப்பட்டுள்ளன. மேலும், நீர்நிலைப் புறம்போக்குப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, நீர்தேக்க அமைப்புகள், ஓடைகள், கால்வாய்கள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு ஜல் சக்தி அபியான் என்ற இயக்கத்தின் கீழ் நீர் மேலாண்மையினை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு போன்ற நீர் மேலாண்மை பணிகள் நாடு முழுவதும் 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளவையாக 254 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களும், 165 ஒன்றியங்களும், 5135 கிராம ஊராட்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் ஊரக பகுதிகளில் 297 வருவாய் குறுவட்டங்கள், நகர்ப்புறப் பகுதிகளில் 244 வருவாய் குறுவட்டங்களும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் பொதுக்குழாய், தனிநபர் குழாய் மூலமாக தண்ணீர் வழங்குவது இந்த இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட ராஜதானி, கண்டமனூர் குறு வட்டங்களும், உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட தேவாரம், எரசக்கநாயக்கனூர் வருவாய் குறுவட்டங்களும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, செயற்பொறியாளர் கவிதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story