வானவில் : இந்திய நிறுவனத்தின் பேட்டரி ஸ்கூட்டர் அறிமுகம்


வானவில் : இந்திய நிறுவனத்தின் பேட்டரி ஸ்கூட்டர் அறிமுகம்
x
தினத்தந்தி 10 July 2019 6:01 PM IST (Updated: 10 July 2019 6:01 PM IST)
t-max-icont-min-icon

குர்கானை சேர்ந்த லி அயன் எலெக்ட்ரிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் பேட்டரி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

‘ஸ்போக்’ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.65 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையாகும்.

வர்த்தக ரீதியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறவேண்டும் என்பதற்காக முன்பகுதியில் பொருட்கள் வைப்பதற்கான கூடையும், பின் பகுதியில் சரக்குகளை வைக்க வசதியாக பெரிய பெட்டியும் உள்ளது. வாகன ஓட்டுனர் பின் இருக்கைக்குப் பதிலாக மிகப் பெரிய பெட்டியில் சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தயாரித்த ஸ்கூட்டர்களில் 60 சதவீதத்தை பிக் பாஸ்கெட் நிறுவனம் வாங்கியுள்ளது. வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கு டெலிவரி செய்யும் நிறுவனம்தான் பிக் பாஸ்கெட்.

இந்நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் பேட்டரி வாகனங்களை தனது ஊழியர்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக லிஅயன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த வகையில் நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளராக பிக் பாஸ்கெட் திகழ்கிறது.

பொதுமக்களும் இதை வாங்கி பயன்படுத்தலாம். இதில் ஸ்போக் மாடல் 2.9 கிலோவாட் பேட்டரியைக் கொண்டது. இந்த பேட்டரி மாற்று வகையில் அதாவது ரீசார்ஜுக்கு ஒரு பேட்டரியும், வாகனத்துக்கு ஒரு பேட்டரியும் உள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 2.1 கிலோவாட் மோட்டார் உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கி.மீ. ஆகும். இதில் எகானமி மோட் பயன்படுத்தினால் அதிகபட்சம் 130 கி.மீ. தூரம் வரை 30 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம். அதேபோல பவர் மோடை பயன்படுத்தினால் 100 கி.மீ. தூரம் 45 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம்.

இந்த ஸ்கூட்டரில் பின்நோக்கி செல்லும் (ரிவர்ஸ் கியர்) வசதியும் உள்ளது. சரக்குகளை ஏற்றி அதை பின்னுக்கு இழுப்பது கடினம். அதைக் கருத்தில் கொண்டே ரிவர்ஸ் வசதியும் தரப்பட்டுள்ளது. இவை தவிர ஜி.பி.எஸ். நேவிகேஷன், யு.எஸ்.பி. சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வாகனத்தை திருட முற்பட்டால் எச்சரிக்கை ஒலி எழுப்பும் அலாரம் உள்ளிட்டவையும் இதில் உள்ளன.

இதன் இருக்கை உயரம் மிகவும் குறைவாகும் (760 மி.மீ). பேட்டரி இல்லாத நிலையில் வாகனத்தின் எடை 90 கி.கி. மட்டுமே. எடை குறைவான இந்த வாகனத்தை அனைவரும் வாங்கிப் பயன்படுத்தலாம். நகர போக்குவரத்துக்கு ஏற்றதாக, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாததாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

Next Story