வானவில் : சீறிப் பாய வந்துள்ளது பி.எம்.டபிள்யூ. எஸ் 1000
சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் டி.வி.எஸ். நிறுவனத்துடன் இணைந்து தனது சர்வதேச பிராண்டு மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்து வருகிறது.
சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் எஸ் 1000. ஆர்.ஆர். மாடலில் உள்ள 3 வேரியன்ட்களையுமே இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ.18.50 லட்சமாகும். புரோ மாடல் விலை ரூ.20.95 லட்சமாகவும், புரோ ஸ்போர்ட் மாடல் விலை ரூ.22.95 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள என்ஜின் சூப்பர் ஸ்போர்ட் 999 சி.சி. திறன் கொண்டது. இது 207 ஹெச்.பி. திறனை 13,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 11 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் ஷிப்ட்காம் தொழில் நுட்பம், ஏ.பி.எஸ். வசதி, டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளது. இதில் நான்கு வகையான ஓட்டுனர் தேர்வு நிலைகளைத் தேர்ந்தெடுக்க முடியும். 6.5 அங்குல புல் டி.எப்.டி. டிஸ்பிளே உள்ளது. இந்த மாடலில் ஹேயெஸ் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் எடை 197 கிலோவாகும். முந்தைய மாடலை விட இதன் எடை 11 கிலோ குறைவாகும்.
இது கவாஸகி நின்ஜா இஸட்.எக்ஸ் 10.ஆர், (விலை ரூ.14 லட்சம்), ஹோண்டா சி.பி.ஆர் 1000.ஆர்.ஆர். (ரூ.16.40 லட்சம்), சுஸுகி ஜி.எஸ்.எக்ஸ். ஆர்1000.ஆர் (ரூ.19.80 லட்சம்) ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 6: அதேசமயம் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எக்ஸ் 6 மாடல் எஸ்.யு.வி. கார் தற்போது புதிய வடிவமைப்போடு பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டு வந்துள்ளது. மூன்றாம் தலைமுறை மாடலாக வந்துள்ள இந்த எஸ்.யு.வி. கார் வடிவமைப்பு மட்டுமின்றி என்ஜினிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்பிரிவில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் ஜி.எல்.இ. கூபே, ஆடி க்யூ8, போர்ஷே கேயன் கூபே ஆகிய போட்டி நிறுவன மாடல் கார்களை எதிர்கொள்ளும் வகையில் இதில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே இந்நிறுவனம் எக்ஸ் 5 மற்றும் எக்ஸ் 7 மாடலில் நான்காம் தலைமுறை கார்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது எக்ஸ் 5 மாடலை காட்டிலும் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கம்பீரமான தோற்றப் பொலிவை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அகலமான மேல் பகுதி, புதிய வடிவிலான முன்புற கிரில் ஆகியன கம்பீரமான தோற்றத்தை உறுதி செய்கின்றன.
பின்பகுதியானது எக்ஸ் 4 மாடலைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இதன் நீளம் 4,935 மி.மீ. ஆகும். முந்தைய மாடல்களைக் காட்டிலும் இதன் நீளம் 26 மி.மீ. அதிகம். இதன் அகலம் 2,004 மி.மீ ஆகும். இதன் உள்புறத் தோற்றம் எக்ஸ் 5 மாடலில் உள்ளதைப் போன்றே உள்ளது. இதில் உள்ள ஏர் சஸ்பென்ஷன் 80 மி.மீ கூடுதல் உயரம் அளிக்க வகை செய்கிறது. இதன் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். சாகசப் பயணத்துக்கு ஏற்ற வகையிலான தேர்வு நிலையை விட மேலும் கூடுதலாக நான்கு விதமான ஓட்டுனர் தேர்வு வசதிகள் இதில் உள்ளன.
இந்த மாடலில் அதிக அளவிலான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. விபத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி, பாதசாரிகள் திடீரென எதிர்ப்படுவதை எச்சரிப்பது, நகர சாலைகளுக்கு ஏற்ற பிரேக்கிங் வசதி இதில் உள்ளன. குரூயிஸ் கண்ட்ரோல் வசதி உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளன. இதில் எம் ஸ்போர்ட் வேரியன்ட் விலை ரூ.92.20 லட்சமாகும்.
Related Tags :
Next Story