நாச்சானந்தல் வனப்பகுதியில் 30 வருடங்களுக்கு மேலான ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நாச்சானந்தல் வனப்பகுதியில் 30 வருடங்களுக்கும் மேலான ஆக்கிரமிப்புகளை வனத்துறையினர் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருகில் உள்ள நாச்சானந்தல் பகுதியில் கண்ணமடை காப்புக் காட்டிற்கு சொந்தமாக சுமார் 10 ஏக்கர் அளவில் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு விவசாயம் செய்தும், கொட்டகை அமைத்து கால்நடைகளை வளர்த்து கொண்டும் வருவதாக வனத்துறைக்கு புகார்கள் வந்து உள்ளன.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதிகளை வேலூர் கூடுதல் வனப் பாதுகாப்பு அலுவலர் சேவாசிங் உத்தரவின்பேரில் திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் மேற்பார்வையில் திருவண்ணாமலை வனச் சரக அலுவலர்கள் மனோகரன், வசந்த பாஸ்கர், வனவர் முருகன், காளிதாஸ் மற்றும் குழுவினர் நேற்று நாச்சானந்தலில் வனப்பகுதியில் செய்யப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகளை நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் சர்வேயர் மூலம் வனப்பகுதிக்கான நிலம் அளவீடு செய்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அளவு கல் நடப்பட்டது. அப்போது சில விவசாயிகள் கால்நடைகளுக்காக அமைக்கப்பட்ட கொட்டகையையாவது விட்டு விடுங்கள் என்று வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் அதிகாரிகள் கொட்டகைகள், சிறிய குடிசை வீடுகள் போன்றவற்றை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story