மாவட்ட செய்திகள்

அரக்கோணம் அருகே பயங்கரம்:அம்மிக்கல்லை தலையில் போட்டு விதவைப்பெண் கொலை + "||" + Near Arakkonam Terror: Widow woman killed by putting her on the head

அரக்கோணம் அருகே பயங்கரம்:அம்மிக்கல்லை தலையில் போட்டு விதவைப்பெண் கொலை

அரக்கோணம் அருகே பயங்கரம்:அம்மிக்கல்லை தலையில் போட்டு விதவைப்பெண் கொலை
அரக்கோணம் அருகே விதவை பெண் தலையில் அம்மிக்கல்லை போட்டு மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மனநிலை பாதிக்கப்பட்ட அவரது தாயாரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார்.
அரக்கோணம், 

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே சின்னகைனூர், ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (வயது 45). இவரது கணவர் ஜகதலபிரதாபன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் கோமதிக்கு (24) திருமணமாகி அரக்கோணம் அருகே அம்மனூர் பகுதியில் வசித்து வருகிறார். நிர்மலா மனநிலை பாதிக்கப்பட்ட தனது தாயார் படவேட்டம்மாளுடன் அரக்கோணம் ராமசாமி நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவர் அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே திருத்தணி செல்லும் சாலையில் டெய்லர் கடையும் நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தாயாருடன் நிர்மலா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் முகத்தை மூடிய நிலையில் ரத்தக்காயங்களுடன் கிடந்தார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை சத்தம் போட்டு எழுப்பி உள்ளனர். அவர் எழுந்திருக்கவில்லை. ரத்தக்காயங்கள் இருந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் சென்று பார்த்தபோது நிர்மலா இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது தலையிலும் ரத்தக்காயம் இருந்தது.

அருகில் அம்மிக்கல் ஒன்று ரத்தக்கறையுடன் கிடந்தது. வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது படவேட்டம்மாள் ரத்தகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நிர்மலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய நிர்மலாவின் செல்போனை கைப்பற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் செல்போன் மற்றும் மொபட் திருடப்பட்டிருந்தது.

கொலையாளிகள் குறித்து துப்பு துலக்குவதற்காக வேலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் சிம்பாவை போலீசார் மோப்பம்பிடிக்க விட்டனர். அந்த இடத்திலிருந்து வேகமாக ஓடியவாறு சோளிங்கர் நெடுஞ்சாலைக்கு சென்று அங்கு நின்று விட்டது. கொலையாளிகள் யார் என்பதை கண்டறிய தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து சென்றனர். இது தொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிர்மலாவை மர்மநபர்கள் கொலை செய்தபோது அதனை படவேட்டம்மாள் தடுக்க வந்திருக்கலாம் என்றும் இதனால் கொலையாளிகள் அவரை தாக்கியிருக்கலாம் என தெரிகிறது. நிர்மலா பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்சினையில் கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நிர்மலாவின் செல்போன் இருந்தால் அதனை வைத்து நம்மை போலீசார் பிடித்துவிடுவார்கள் என கருதிய கொலையாளிகள் அதனை திருடிச்சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிர்மலாவுடன் பேசியவர்கள் யார்? எங்கிருந்து பேசினார்கள் என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களில் அதிக அளவில் கொலைகள் நடந்து வருகிறது. இதை தடுக்க கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும், போலீசார் அடிக்கடி ரோந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...