பெங்களூருவில் 2 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் சாவு 7 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு


பெங்களூருவில் 2 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் சாவு 7 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 11 July 2019 4:30 AM IST (Updated: 10 July 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 2 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் உயிர் இழந்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு, 

பெங்களூருவில் 2 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் உயிர் இழந்த சம்பவம் நடந்துள்ளது. 7 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கட்டிடங்கள் இடிந்து விழுந்தன

பெங்களூரு புலிகேசிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காக்ஸ்டவுன் 2-வது கிராஸ் பகுதியில் புதிதாக 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு கட்டுமான பணிகள் முடிந்து வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த கட்டிடத்தையொட்டியே மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு பீகார் மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அந்த தொழிலாளர்கள், கட்டிடத்திலேயே தங்கி இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் 4 மாடி கட்டிடத்தின் தரை தளம் மண்ணுக்குள் புதைந்தது. தரைதளத்தில் உள்ள சுவர்களும் இடிந்து விழுந்தது. இதனால் அந்த கட்டிடம் முற்றிலும் இடிந்து விழும் நிலைக்கு சென்றது. கட்டிடத்தின் தரை தளத்தில் படுத்திருந்த காவலாளி, அவரது குடும்பத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள். இதற்கிடையில், அந்த கட்டிடத்தின் அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மற்றொரு கட்டிடமும் அடுத்த சில நிமிடங்களில் இடிந்து விழுந்தது.

3 பேர் சாவு

அந்த கட்டிடத்திற்குள் தங்கி இருந்த தொழிலாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், புலிகேசிநகர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 மாடி கட்டிடத்திற்குள் சிக்கி இருந்த காவலாளி, அவரது மனைவி, குழந்தையை மீட்பு குழுவினர் மீட்டனர். ஆனால் காவலாளியும், அவரது மனைவியும் பலியாகி இருந்தனர்.

இதையடுத்து, உயிருக்கு போராடிய குழந்தையை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் காவலாளி நாராயண்(வயது 35), அவரது மனைவி நிர்மலா(27) என்பதும், இந்த தம்பதியின் 3 வயது பெண் குழந்தை அனுஷ்கா என்பதும் தெரியவந்தது. அதே நேரத்தில் இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

பரமேஸ்வர் விசாரணை

பின்னர் நீண்ட நேர போராட்டத்தை தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 8 தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அந்த தொழிலாளர்கள் பெயர்கள் உத்தம், சந்தோஷ், உமேஷ், அமீர், பிரதாப், ராம், சம்புகுமார் மற்றும் மஞ்சுதேவி ஆகிய 8 பேர் ஆகும். இதற்கிடையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுதேவி(36) என்பவரும் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.

அந்த கட்டிடங்களுக்குள் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதனால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று காலையில் சம்பவ இடத்தை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரி கே.ஜே.ஜார்ஜ், மாநகராட்சி மேயர் கங்காம்பிகே ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

ரூ.5 லட்சம்

பின்னர் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறுகையில், “2 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குழந்தை உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்த கட்டிடம் முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சியின் அனுமதியை மீறி கூடுதலாக மாடிகள் எழுப்பப்பட்டுள்ளன. தரமான கட்டுமான பொருட்களையும் பயன்படுத்தவில்லை. இதுவே கட்டிடங்கள் இடிந்து விழ முக்கிய காரணம் ஆகும். இதில், சம்பந்தப்பட்ட என்ஜினீயர்கள் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்த சம்பவம் குறித்து புலிகேசிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பெங்களூருவில் பரபரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story