16 நாட்களுக்கு பிறகு, கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல 16 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா இடங்கள் வனப்பகுதியில் அமைந்துள்ளன. இதில் குறிப்பாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி புகழ் பெற்றதாகும். இங்கு லட்சக்கணக்கான மரங்களுடன் இயற்கையான ஏரியும் உள்ளதால் சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல அதிக ஆர்வம் கொள்வார்கள்.
மேலும் இங்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கி பாறை, பேரிஜம் ஏரி வியூ, மதிகெட்டான் சோலை உள்பட பல்வேறு இயற்கையான சுற்றுலா இடங்கள் உள்ளன. இங்கு செல்வதற்கு வனத்துறை அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும். இந்த ஏரியில் இருந்து தான் பெரியகுளம் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுறது.
இதற்கிடையில் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக கூறி கடந்த 24-ந் தேதி முதல் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனையடுத்து யானைகள் நடமாட்டம் இல்லை என உறுதி செய்யப்பட்ட நேற்று முதல் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. 16 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் பேரிஜம் ஏரிக்கு சென்றனர்.
இதையடுத்து பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கி பாறை, மதிகெட்டான் சோலை, பேரிஜம் ஏரி வியூ உள்பட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர். பேரிஜம் ஏரிப்பகுதி திறக்கப்பட்டதின் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story