நத்தத்தில் பட்டப்பகலில் பயங்கரம், கழுத்தை அறுத்து பெயிண்டர் கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நத்தத்தில் பட்டப்பகலில் கழுத்தை அறுத்து பெயிண்டரை படுகொலை செய்த, மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நத்தம்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜ்நகரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் பிரபு (வயது 32). இவர், பெயிண்டராக வேலை செய்து வந்தார். நேற்று இவர் வேலைக்கு செல்லவில்லை. எனினும், காலையில் வழக்கம் போல் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அந்த பகுதியில் பூட்டி கிடந்த ஒரு கடையின் முன்பு அவர் படுத்து தூங்கினார்.
அப்போது மர்ம நபர்கள், ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். மேலும் கடையின் முன்பு தூங்கி கொண்டிருந்த பிரபுவின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல கத்தியால் அறுத்தனர். இதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
பிரபுவை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? முன்விரோதம் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பிரபுவுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நத்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story