கொடுக்கல் வாங்கல் தகராறில் நிதி நிறுவன அதிபரை கொன்று ஏரியில் உடல் புதைப்பு சரணடைந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை


கொடுக்கல் வாங்கல் தகராறில் நிதி நிறுவன அதிபரை கொன்று ஏரியில் உடல் புதைப்பு சரணடைந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 July 2019 4:30 AM IST (Updated: 10 July 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் நிதி நிறுவன அதிபரை கொன்று உடலை ஏரியில் புதைத்ததாக வாலிபர் ஒருவர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரிமங்கலம், 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த முக்குளம் நகுலன் கொட்டாயை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 30). இவர் நேற்று முக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனிடம் சரண் அடைந்து பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சின்னமுத்தூரை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் லட்சுமணன்(53) என்பவரை கடந்த 30-ந்தேதி இரவு கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்து, உடலை முக்குளம் ஏரியில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரங்கநாதனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை முக்குளம் ஏரிக்கு போலீசார் அழைத்து சென்று லட்சுமணனின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் விரைந்து வந்து ரங்கநாதனிடம் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து லட்சுமணனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவருடைய உடல் புதைக்கப்பட்டு 10 நாட்கள் ஆகி உள்ளது. இதனால் உடல் அழுகிய நிலையில் இருக்கும் என்பதால் போலீசார் பிரேத பரிசோதனையை சம்பவ இடத்திலேயே மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதி நிறுவன அதிபர் பணம் கொடுக்கல் வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா?, அல்லது பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து சரணடைந்த ரங்கநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story