காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உண்ணாவிரதம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும், 14 ஆண்டுகள் பணியாற்றிய அரசு டாக்டர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சங்க தலைவர் லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார்.
இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள அரசு டாக்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். டாக்டர்களின் இந்த போராட்டத்தால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை பாதிக்கப்பட்டது. ஆனால் உள் நோயாளிகளுக்கு வழக்கம்போல் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து அனைத்து மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் லட்சுமி நரசிம்மன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்கனவே மருத்துவ பணியிடங்களில் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், 300-க்கும் மேற்பட்ட பணியிடங்களை தமிழக அரசு குறைத்துள்ளது. நோயாளிகள் அதிகரித்து வரும் வேளையில் இதுபோன்ற பணியிடங்கள் குறைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, நோயாளிகளுக்கு ஏற்ப டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது மண்டல அளவில் ஒருநாள் அடையாள உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story