16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: கவர்னர் பிறப்பிக்கும் உத்தரவை பா.ஜனதா ஏற்கும் மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி
காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், கவர்னர் பிறப்பிக்கும் உத்தரவை பா.ஜனதா ஏற்கும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
பெங்களூரு,
காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், கவர்னர் பிறப்பிக்கும் உத்தரவை பா.ஜனதா ஏற்கும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி சதானந்தகவுடா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஏற்றுக்கொள்ளும்
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதனால் இந்த கூட்டணி அரசு கவிழும் நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னர் தலையிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு உள்பட எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதை பா.ஜனதா ஏற்றுக்கொள்ளும். கூட்டணி அரசின் பலம் 100 ஆக குறைந்துவிட்டது. பா.ஜனதாவுக்கு 107 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர்கள் தங்களின் எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்க முடியாவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களை குறை சொல்வது ஏன்?. இது அந்த கூட்டணி கட்சிகளின் பொறுப்பு. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் வெளியே செல்லவில்லை.
ஏன் பேசக்கூடாது
எங்கள் கட்சிக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவிடம் பேச விரும்பினால் அவர்களிடம் ஏன் பேசக்கூடாது. ராஜினாமா செய்தவர்கள் தற்போது காங்கிரஸ் அல்லது ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் கிடையாது. அவர்கள், பொதுமக்கள் போல் சாமானியவர்கள் தான்.
யாரும், யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்வதாக கூறுவது முற்றிலும் தவறானது. உள்கட்சி பிரச்சினையால் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். தொடக்கத்தில் பா.ஜனதா அதிக எம்.எல்.ஏ.க்களை பெற்று பெரிய கட்சியாக இருந்ததால், ஆட்சி அமைத்தோம். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளோம்.
இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.
Related Tags :
Next Story