மீனாட்சி அம்மன் கோவில் செல்போன் பாதுகாப்பு மையத்தில் பண மோசடி


மீனாட்சி அம்மன் கோவில் செல்போன் பாதுகாப்பு மையத்தில் பண மோசடி
x
தினத்தந்தி 11 July 2019 4:15 AM IST (Updated: 11 July 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்போன் பாதுகாப்பு மையத்தில் பண மோசடி செய்த பெண் ஊழியரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு ராஜகோபுரம் வழியாக சாமி சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ளது வீரவசந்தராயர் மண்டபம். இந்த மண்டபத்தின் இரு புறங்களிலும் கடைகள் இருந்தன. கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி இரவு கோவில் அடைக்கப்பட்ட பிறகு அங்குள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவிலுக்குள் செல்லும் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் குறிப்பாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் கோவில் நிர்வாகம் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பாதுகாப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்தது.

அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செல்போன்கள் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டது. அதில் ஒரு செல்போனை பாதுகாக்க ரூ.10 வசூலிக்கப்படும் என்றும், செல்போன்கள் 4 மணி நேரம் மட்டுமே பாதுகாக்கப்படும் என்று நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 5 கோபுர வாசல்களில் செல்போன் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டு, அங்கு மகளிர் சுய உதவி குழு பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

மேலும் அவர்களை கோவில் பெண் ஊழியர்கள் 2 பேர் காலை, மாலை என கண்காணித்து வந்தனர். செல்போன் பாதுகாப்பு மையத்தில் வசூலாகும் பணத்தை மகளிர் சுயஉதவி குழு பெண்கள் கோவில் ஊழியர்களிடம் கொடுப்பார்கள். அந்த பணத்தை கோவில் ஊழியர்கள் தினமும் அலுவலகத்தில் செலுத்தி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் பெண் ஊழியர் ஒருவர் செல்போன் பாதுகாப்பு மையத்தில் வசூலான பணத்தை சரிவர செலுத்தவில்லை.

இதுகுறித்து கோவில் இணை கமிஷனருக்கு தெரிந்ததும், அதனை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி கோவில் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அதில் அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.10 ஆயிரத்து 600ஐ செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண் ஊழியரிடம் கேட்ட போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். அதன்பின்னர் அவர் தான் பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் தன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க உடனே அந்த பணத்தை அலுவலகத்தில் கட்டி தப்பித்து கொண்டார். இருப்பினும் அந்த பெண் ஊழியரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த பெண் வேறு பணிக்கு மாற்றப்பட்டார்.

Next Story