மேலூர் அருகே மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி பலி


மேலூர் அருகே மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி பலி
x
தினத்தந்தி 10 July 2019 10:45 PM GMT (Updated: 10 July 2019 7:49 PM GMT)

மேலூர் அருகே மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டியதில் பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

மேலூர்,

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மட்டங்கிபட்டியில் மந்தை கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள கண்மாய் பகுதியில் மஞ்சுவிரட்டு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு, அவை முதலில் அவிழ்த்து விடப்பட்டன.

அதன்பிறகு மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 200–க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சு விரட்டு நடைபெற்றது. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை மட்டங்கிபட்டி, மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் பிடிபடவில்லை. இந்த மஞ்சுவிரட்டினை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

முடிவில் மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள், குத்துவிளக்கு, சைக்கிள், பெரிய பாத்திரங்கள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த மஞ்சு விரட்டை வேடிக்கை பார்த்த கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (வயது 53) என்பவர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதே போல் காளையை அடக்க முயன்ற மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story