சென்னை கோட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க 136 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு


சென்னை கோட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க 136 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு
x
தினத்தந்தி 10 July 2019 11:45 PM GMT (Updated: 10 July 2019 7:50 PM GMT)

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க 136 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரெயில் சேவை வழங்கப்படுகிறது. குறைவான கட்டணம் என்பதால் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் எப்பொழுதும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். சில ஆசாமிகள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சங்கிலி பறிப்பு, செல்போன் திருட்டு, குழந்தை கடத்தல், பெண்களுக்கு பாலியல் தொல்லை, கொலை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் பயணிகள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை கட்டுப்படுத்தும் நோக்கில் ரெயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குற்றச்செயல்கள் அதிகம் நடக்கும் ரெயில் நிலையங்களை தேர்ந்தெடுத்து அதனை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர்.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் நிர்பயா நிதியில் 136 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் இத்தகைய தொடர் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மத்திய பட்ஜெட்டில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு நிர்பயா நிதி என்ற பெயரில் ரூ.1,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியைக்கொண்டு ரெயில் நிலைய நடைமேடைகள், ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து அதை ரெயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரெயில் நிலைய மேலாளர் கண்காணிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் மொத்தம் 8ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் உள்ளன. ஆனால், இதுவரை 350 ரெயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. ரெயில் நிலையங்களில் மட்டுமல்லாமல் ராஜ்தானி உள்ளிட்ட ரெயில்களிலும் இப்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது படிப்படியாக அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில்கள் என அதிகரிக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை கோட்டத்தில் மட்டும் 136 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் ‘ரெயில் டெல்’ நிறுவனத்திடம் தெற்கு ரெயில்வே வழங்கி உள்ளது. தற்போது வரை அரக்கோணம் மற்றும் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல், எழும்பூர் மதுரை, கோவை போன்ற முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நிர்பயா நிதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் பயணிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்த அரக்கோணம், செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை, காட்பாடி, ஆம்பூர், மேல்மருவத்தூர், பெரம்பூர், திருத்தணி, திருவள்ளூர், ஆவடி, மூர்மார்க்கெட், கிண்டி, அம்பத்தூர், நுங்கம்பாக்கம் உள்பட 136 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

இதற்காக ஒவ்வொரு ரெயில் நிலையத்துக்கும் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம். தற்போது அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஒரு நிலையான கண்காணிப்பு மட்டுமல்லாமல், பிந்தைய நிகழ்வின் குற்றவியல் விசாரணைக்கும் உதவுகிறது. இதன் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் எளிதாக பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பறக்கும் ரெயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து பறக்கும் ரெயில் நிலையங்களிலும் ஏ.டி.எம் மையம், சூப்பர் மார்க்கெட், வங்கிகள், கடைகள் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து தனியார் பாதுகாவலர்களை அந்தந்த நிறுவனம் அமைக்கும் பட்சத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் பறக்கும் ரெயில் நிலையங்களில் போலீசார் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்படி போலீசார் அங்கு தங்கும் பட்சத்தில் அவர்கள் 30 நிமிடத்துக்கு ஒரு தடவை அந்தந்த ரெயில் நிலையத்திற்கு ஆய்வு செய்ய வசதியாக இருக்கும். மேலும் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் உடனடியாக சென்று தடுக்க முடியும். கேமராக்கள் அமைக்கும் பணி விரைவில் முடிவடைந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்க ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story