மீஞ்சூர் அருகே குடிமராமத்து திட்ட பணிகள்; பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் திடீர் ஆய்வு
மீஞ்சூர் அருகே நடந்து வரும் குடிமராமத்து திட்ட பணிகளை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மீஞ்சூர், ஜூலை.11–
திருவள்ளூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.10 கோடியே 17 லட்சம் நிதியை தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கி உத்தரவிட்டது. இதனை தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை ஆரணியாறு உபநில வடிநில கோட்டத்தில் உள்ள 30 ஏரிகளில் பணிகள் தொடங்கப்பட்டது.
மீஞ்சூரை அடுத்த நெய்தவாயல் பெரிய ஏரியின் நீர்வரத்து கால்வாய் ஏரிக்கரை உள்பட பணிகளை ரூ.28 லட்சம் செலவில் செப்பனிடும் பணி தொடங்கப்பட்டது. உதவி செயற்பொறியாளர் முருகன், பொறியாளர் கண்ணன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல் மீஞ்சூரை அடுத்த கல்பாக்கம் ஏரி ரூ.19 லட்சம் செலவிலும், வாயலூர் மாமணிக்கால் ஏரி ரூ.44 லட்சம் செலவிலும், தாங்கள்பெரும்புலம் ஏரி ரூ.34 லட்சம் செலவிலும் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வந்த நிலையில் சென்னை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஜெயராமன், கண்காணிப்பு பொறியாளர் கணேசன், ஆரணியாறு உப கோட்டத்தின் செயற்பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் திடீரென வேலூர் கிராமத்தில் பள்ள ஏரியில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது உதவி பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் ஏரியில் நடைபெறும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது பொதுப்பணித்துறை பொறியாளர் பாலசுந்தரம், ஜெயகுரு, சிவகுமார், சரவணன், தேவதானம் கூட்டுறவு சங்கத் தலைவர் சம்பத் உள்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் கல்பாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.