திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் மோதுவது போல வந்தவரை தட்டிக்கேட்டதால் மோதல்; 10 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் மோதுவது போல வந்தவரை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளுரை அடுத்த கொட்டையூர் காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் கார்த்திக் (வயது24). இவர் நேற்று முன்தினம் மும்முடிக்குப்பம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மும்முடிக்குப்பம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் அவர் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ் அந்த பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான குமரேசன் உள்பட 5 பேர் கார்த்திக்கை தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளனர். பதிலுக்கு கார்த்திக் தன் நண்பர்களான மணிகண்டன், தீனா, அஜித், ஜீவா ஆகியோருடன் சேர்ந்து தினேஷ் தரப்பினரை தாக்கியுள்ளார். இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக மப்பேடு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.