மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க நடவடிக்கை: உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தீவிரம்


மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க நடவடிக்கை: உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தீவிரம்
x
தினத்தந்தி 11 July 2019 4:30 AM IST (Updated: 11 July 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

மாநில தேர்தல் ஆணையரை நியமித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த புதுவை அரசு தீவிரம் காட்டியுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2011-ம் ஆண்டு முடிவடைந்தது.

அதன்பின் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. அதன்பின் வந்த அரசுகள் இதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. ஆனால் அரசு தரப்பில் கண்டு கொள்ளப்படாத நிலையே இருந்து வந்தது. இதற்கிடையே வார்டு வரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளினால் வழக்குகள் தொடரப்பட்டு சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றன. இதுகுறித்து விசாரித்த கோர்ட்டு வார்டு வரையறை செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து வார்டு வரையறை பணிகள் முடிந்துள்ளன. உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் நிதியை பெற முடியவில்லை என்று பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டின.

இந்தநிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த புதுவை அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல்கட்டமாக காலியாக உள்ள மாநில தேர்தல் ஆணையர் பணியிடத்தை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

25 ஆண்டுகள் அரசு பணி புரிந்த, தேர்தல் நடத்தி அனுபவம் உள்ள 65 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று உள்ளாட்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் 3 ஆண்டுகள் இந்த பணியில் இருக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை வருகிற 29-ந்தேதிக்குள் சுய்ப்ரேன் வீதியில் உள்ள உள்ளாட்சித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கலாம். இ-மெயிலிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 5 நகராட்சிகள், அரியாங்குப்பம், பாகூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூர், கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருபட்டினம், திருநள்ளாறு ஆகிய 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும் 109 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் 1,147 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Next Story